விநாயகர் சதுர்த்தி நாளை ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் முழு முதற் கடவுள். அதே நேரத்தில் மிக மிக எளிமையானவர். ஒரே ஒரு அருகம் புல் வைத்து பூஜித்தாலும் அற்புதமான வாழ்வை தருவார் என்பது ஐதீகம். விநாயகரை பொறுத்தவரை மண், கல், மஞ்சள், சந்தனம், விபூதி, சாணம், நவதானியம் என எதில் வைத்து பூஜை செய்தாலும் அமோகமான பலன்களை அள்ளித் தருவார். பொதுவாக விநாயகர் சதுர்த்தி நாளில் களி மண்ணால் செய்யப்பட்ட புதிய விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்குவது தொடங்கி, மீண்டும் அந்த சிலையை எடுத்துச் சென்று கரைப்பது வரை அனைத்துமே மிகவும் முக்கியமானதாகும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதற்கு மட்டுமின்றி, விநாயகர் சிலை வாங்குவதும் நல்ல நேரத்திலேயே வாங்க வேண்டும் என்பது ஆன்மீக அன்பர்கள் வாக்கு.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டாலும், அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி தான். ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி் நாளை புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்ட் 26ம் தேதி பகல் 02.22 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது.
வளர்பிறை சதுர்த்தி அன்று காலை சூரிய உதய நேரத்தில் சதுர்த்தி திதி இருக்க வேண்டும் என்பதால் ஆகஸ்ட் 27ம் தேதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி அன்று புதிதாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி விநாயகர் சிலை வாங்குபவர்கள் இன்று ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 04.50 முதல் 05.50 வரை அல்லது மாலை 06.30 முதல் இரவு 08.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம்.
ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலையை வாங்கியவர்கள், ஆகஸ்ட் 27ம் தேதியன்று காலை 6 மணி முதல் 07.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம்.
இயலாதவர்கள் நாளை ஆகஸ்ட் 27ம் தேதி காலை 09.10 மணி முதல் 10.20 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து, அந்த நேரத்திற்குள் வழிபடலாம்.
விநாயகருக்கு சுண்டல், கொழுக்கட்டை, சாம்பார், சாதம், பாயசம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 01.35 முதல் 2 வரையிலான நேரத்தில் படையல் போட்டு வழிபடலாம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை மாலையிலேயே செய்யும் வழக்கம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 06.10 மணிக்கு மேல் வழிபடலாம். பொதுவாக விநாயகர் சிலையை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபட வேண்டும். ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலை வாங்கி இருந்தால் 3ம் நாளான ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கலாம். ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சிலை வாங்கி இருந்தால் 3வது நாளான ஆகஸ்ட் 29ம் தேதியன்று கரைக்க முடியாது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆகஸ்ட் 31ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்று கரைக்கலாம். விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.
வீட்டில் விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் தினமும் விநாயகருக்கு வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம், முடிந்தால் ஏதாவது ஒரு சுண்டல் அல்லது இனிப்பு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அதன்பிறகு வீட்டிற்கு அருகில் உள்ள நீர்நிலைக்கு எடுத்துச் சென்று கரைக்கலாம். அப்படி நீர் நிலைகள் எதுவும் அருகில் இல்லாதவர்கள், வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து, அதற்கு விநாயகர் சிலையை வைத்து கரைத்து, பிறகு அந்த தண்ணீரை எடுத்துச் சென்று கால் படாத இடத்திலோ அல்லது பூத்தொட்டியிலோ ஊற்றி விடலாம்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?