ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அஸ்வின்
Top Tamil News August 27, 2025 08:48 PM

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அஸ்வின்.

தமிழகத்தை சேர்ந்த முண்ணனி கிரிக்கெட் வீரரான அஷ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் திடீரென ஓய்வு பெற்றார். அதன்பின் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் தொடர்களில் மட்டும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். எந்த முடிவும் ஒரு புதிய தொடக்கத்துடன் அமையும். அதுபோல், ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது காலம் இன்று நிறைவடைகிறது. ஆனால், பல்வேறு லீக்குகளில் விளையாட்டை  ஆராயும் எனது புதிய பயணம் இன்று தொடங்குகிறது.பல ஆண்டுகளாக கிடைத்த அற்புதமான நினைவுகளுக்கும், உருவான நல்ல உறவுகளுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் மற்றும் பிசிசிஐ வழங்கிய அனைத்து வாய்ப்புகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறதோ அதை அனுபவித்து, முழுமையாகப் பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஐபிஎல் பயணத்தில் சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி கேபிட்டல்ஸ், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 221 போட்டிகளில் பங்கேற்ற அவர், 187 விக்கெட்டுகளை எடுத்ததுடன், பேட்டிங்கில் 98 இன்னிங்ஸ்களில் 833 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும். 

39 வயதுக்கு நெருங்கும் அஷ்வின், அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் மட்டுமே பெற்றார். தற்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியதன் மூலம், உலகில் நடைபெறும் மற்ற லீக்கில் அஸ்வின் விளையாட உள்ளார். 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் மற்றும் சிஎல்டி20 கோப்பையை வென்றார். அடுத்த ஆண்டு 2011-லும் மீண்டும் ஐபிஎல் சாம்பியனாகினார். பின்னர் 2014-ஆம் ஆண்டு சிஎல்டி20 வெற்றி பெற்று, தனது அணிக்காக முக்கிய சாதனைகளை பதித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.