திருச்சி துறையூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணத்தின்போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மீதும், அதில் இருந்த டிரைவர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், எடப்பாடி பழனிசாமி பேச்சின்போது டிரைவரை மிரட்டியதாகவும், “இனி ஆம்புலன்ஸ் வந்தால், அதில் உள்ள டிரைவர் நோயாளியாகவே செல்வார்” என்று கூறியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுபோன்ற செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் 1,330 ஆம்புலன்ஸ்கள் மூலம் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உயிர்கள் காக்கப்படுவதாகவும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவது உலகளவில் பின்பற்றப்படும் மரபு என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு இது தெரியாமல், ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவதும், தாக்குதல் நடத்துவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
இதற்கு முன் இதுபோன்ற தாக்குதல்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதாகவும், இந்தச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.