1929 டிசம்பர் 14 அன்று அமெரிக்க நாளிதழ் 'தி நியூயார்க் டைம்ஸ்' இல் ஒரு செய்தி வெளியானது. அது அமெரிக்காவில் மட்டுமல்ல, அதிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஹங்கேரியிலும் மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த செய்தியின்படி, சுமார் 50 பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
அவர்கள் அனைவரும், இந்த ஐரோப்பிய நாட்டின் ஒரு கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்களை விஷம் கொடுத்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த செய்தி சிறிதாக இருந்தாலும், அதில் பல தகவல்கள் இருந்தன.
1911 முதல் 1929 வரை ஹங்கேரியின் தலைநகரம் புடாபெஸ்ட்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாக்ய்ரேவ் என்ற இடத்தில் உள்ள பல பெண்கள் 50க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விஷம் கொடுத்துள்ளனர் என்று கூறப்பட்டது.
இந்த பெண்களை 'தேவதைகளை உருவாக்குபவர்கள்' என்று அழைத்தனர், அவர்கள் ஆண்களை ஆர்செனிக் கலந்த கரைசலால் கொன்றனர்.
பல வருடங்களுக்கு பிறகு தொடங்கிய விசாரணைசிலர் இதை நவீன வரலாற்றில் பெண்களால் ஆண்கள் கூட்டாக கொல்லப்பட்டதில் மிகப்பெரியது என கூறுகின்றனர்.
பின்னர், பெண்களுக்கு எதிராக நடந்த வழக்கு விசாரணையின் போது ஒரு பெயர் தொடர்ந்து முன்வந்தது. அது ஜோஜானா ஃபாசேகாஸ். அவர் அந்த கிராமத்தின் மருத்துவச்சியாக இருந்தவர்.
அந்த காலகட்டத்தில் அந்த கிராமம் ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கு உள்ளூ மருத்துவர் இல்லை. மருத்துவச்சியே மருந்து உள்ளிட்டவற்றை மக்களுக்கு வழங்கினார்.
கிராமத்து பெண்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்னைகளை ஃபாசேகாஸிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர் என்பதால் விஷம் வைத்த வழக்கில் அவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார் என அந்த கிராமத்தில் வசிக்கும் மரியா குன்யா, 2004 ஆம் ஆண்டு பிபிசி வானொலி ஆவண நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
கணவர்கள் அல்லது ஆண்களுடன் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதற்கு எளிய தீர்வு ஒன்றை தன்னால் வழங்க முடியும் என ஃபாசேகாஸ் பெண்களுக்கு உறுதியளித்தார், என குன்யா கூறினார்.
கூட்டுக் கொலையின் ஃபாசேகாஸ் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டாலும், வழக்கு ஆவணங்களில் இருக்கும் கிராமத்து பெண்களின் வாக்குமூலங்களில் இருந்து ஆண்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள், பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை ஆகியவற்றின் வலி மிகுந்த கதைகள் வெளிவந்தன.
ஆனால் இந்த கதை பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது. காவல்துறை அறிக்கைகளின்படி, ஆரம்பகால கொலைகள் 1911 இல் நடந்தன, ஆனால் 1929 வரை இதற்கான விசாரணை தொடங்கவில்லை.
இந்தக் கொலைகளைப் பற்றி எப்படி தெரியவந்தது?
ஆரம்ப நிகழ்வுகள்ஃபாசேகாஸ் 1911 இல் நாக்ய்ரேவ் கிராமத்திற்கு வந்தார்.
குன்யா மற்றும் வழக்கில் பிற சாட்சிகளின்படி, ஃபாசேகாஸ் இரண்டு காரணங்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். முதலாவது, மருத்துவச்சியாக இருந்ததோடு மருந்துகள் பற்றிய அறிவும் அவருக்கு இருந்தது. அவரது சில மருந்து பரிந்துரைகளில் அந்தப் பகுதிகளில் இல்லாத ரசாயனங்கள் அடங்கியிருந்தன.
இரண்டாவது, அவரது கணவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
குன்யாவின் கூற்றுப்படி, "நாக்ய்ரேவில் பாதிரியாரும் இல்லை, மருத்துவரும் இல்லை. எனவே, ஃபாசேகாஸின் அறிவு மக்களை ஈர்த்தது, மக்கள் அவரை நம்பத் தொடங்கினர்."
ஃபாசேகாஸ் பெண்களின் வீடுகளுக்கு சென்று, ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது மற்றும் அவர்களுக்கு துரோகம் செய்வது போன்ற பல விஷயங்களுக்கு சாட்சியாக இருந்தார், என குன்யா கூறினார்.
அதனால், ஃபாசேகாஸ் அந்த காலத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயலை செய்ய தொடங்கினார், அதாவது கருக்கலைப்பு செய்யத் தொடங்கினார். இதற்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தார், ஆனால் அவருக்கு ஒருபோதும் தண்டனை விதிக்கப்படவில்லை.
குன்யாவின் கூற்றுப்படி, உண்மையான பிரச்னை என்னவென்றால், அந்த காலத்தில் திருமணங்கள் பெரும்பாலும் குடும்பங்களின் விருப்பத்தால் நிச்சயிக்கப்பட்டன. பல இளம் பெண்கள் தங்களை விட வயதில் மிகவும் மூத்த ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.
அந்த காலத்தில் விவாகரத்து என்பது சாத்தியமற்றதாக இருந்ததாக குன்யா கூறினார். எவ்வளவு கொடுமைப்படுத்தப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும் பெண்களால் பிரிந்து செல்ல முடியாது.
ஆனால் குடும்பங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் (ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள்) நிலம், சொத்து மற்றும் சட்டப்பூர்வ பொறுப்புகள் அடங்கியிருந்த ஒரு வகையான ஒப்பந்தமும் இருந்ததாக அந்த கால தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் பிரச்னைகளை தன்னால் தீர்த்து வைக்கமுடியும் என ஃபாசேகாஸ் பெண்களுக்கு உறுதியளிக்கத் தொடங்கினார், என குன்யா பிபிசியிடம் தெரிவித்தார்.
ஒரு ஆணுக்கு விஷம் கொடுக்கப்பட்ட முதல் சம்பவம் ஃபாசேகாஸ் கிராமத்திற்கு வந்த 1911 இல் நடந்தது. அதற்கு பிறகு, முதல் உலகப் போரின் போதும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசு உடைந்த போதும் இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து மேலும் பல ஆண்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு 18 ஆண்டுகளில் 45 முதல் 50 ஆண்கள் இறந்தனர். இவர்களில் சிலர் கணவர்களாகவும், சிலர் தந்தைகளாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிராமத்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.
பலர் நாக்ய்ரேவை 'கொலையாளிகளின் நகரம்' என்று அழைக்கத் தொடங்கினர்.
இந்த விஷயங்கள் காவல்துறையின் கவனத்தை ஈர்த்து, 1929 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்கள் கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அந்த உடல்களில் ஒரே ஆதாரம் கிடைத்தது – அது 'ஆர்செனிக்'.
பெண்களுக்கு எதிராக வழக்குகள்கிராமத்தில் சாதாரண ஒரு மாடி கட்டடத்தில் ஃபாசேகாஸ் வசித்து வந்தார், அதன் கதவு தெருவை நோக்கி திறந்தது. இந்த வீட்டில் அவர் மக்களை கொல்ல பயன்படுத்தப்பட்ட பல விஷக் கரைசல்களை அவர் தயாரித்தார்.
இறுதியாக, 1929 ஜூலை 19-ஆம் தேதி காவல்துறை அவரை கைது செய்ய வந்தது.
காவலர்கள் நெருங்குவதைப் பார்த்ததும், தனது விளையாட்டு முடிந்துவிட்டது என்பதை அவர் புரிந்து கொண்டார். காவல்துறையினர் அவரது வீட்டை அடையும் முன், அவர் இறந்துவிட்டார். அவர் தான் உருவாக்கிய விஷத்தை தானே குடித்துவிட்டார்.
ஆனால், இந்த மருத்துவச்சி மட்டும் குற்றவாளி இல்லை.
மற்ற பெண்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தபோது, 1929 ஆம் ஆண்டிலேயே அருகிலுள்ள சோஜ்னோக் நகரத்தில் 26 பெண்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, மீதமுள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சில பெண்கள் மட்டுமே தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களின் நோக்கம் என்ன என்பது சரியாகத் தெரியவில்லை.
இன்றும் பல கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை என இந்த நகரத்தின் ஆவணக் காப்பகத்தின் வரலாற்றாசிரியர் டாக்டர் கீஸா சேக், நீதிமன்ற பதிவுகளின் அடிப்படையில் பிபிசியிடம் கூறினார்.
அந்த பெண்கள் எந்த காரணங்களால் கொலைகளை செய்தனர் என்பதற்கு ஏழ்மை, பேராசை மற்றும் சலிப்பு போன்ற காரணங்கள் உட்பட பல கருத்துருவாக்கங்கள் உள்ளன, என கீஸா சேக் சொல்கிறார்.
பல பெண்களுக்கு ரஷ்ய போர்க்கைதிகளுடன் உறவு ஏற்பட்டது என்று பல செய்திகள் வெளிப்படுத்துகின்றன என அவர் தெரிவித்தார். இந்த போர்க்கைதிகள் வயல்களில் தொழிலாளர்களாக வேலை செய்ய பணிக்கப்பட்டனர்.
அவர்களின் கணவர்கள் திரும்பி வந்தபோது, அந்த பெண்களுக்கு திடீரென தங்கள் சுதந்திரத்தை இழக்கும் உணர்வு ஏற்பட்டது, அதனால் அவர்கள் இதைச் செய்தனர்.
1950களில், வரலாற்றாசிரியர் ஃபெரென்க் கெரோகெவ், கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் சிறையில் இருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு வயதானவரை சந்தித்தார்.
நாக்ய்ரேவ் பெண்கள் பழங்காலத்திலிருந்தே தங்கள் கணவர்களை கொன்று வருவதாக அந்த வயதான விவசாயி கூறினார்.
அருகிலுள்ள திஸ்ஜாகுர்த் நகரத்திலும் சில உடல்கள் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றில் ஆர்செனிக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த மரணங்களுக்கு யாருக்கும் தண்டிக்கப்படவில்லை. சில மதிப்பீடுகளின்படி, அந்த பகுதியில் ஆர்செனிக்கால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 300 வரை சென்றுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு