புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிபட்டியில் நடைபெற்று வரும் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதக்கங்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு அவர் கழுத்தில் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்து, கையில் வாங்கிக்கொண்டு புகைப்படத்துக்கு மட்டும் நின்றார். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது. இந்த வைரல் நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்தச் சம்பவத்துக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளுநரோ, அண்ணாமலையோ, விருந்தினராக வருபவர்கள் தகுதியின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துவது விருது பெறுபவரின் கடமை.
தனிப்பட்ட உணர்ச்சிகளை அப்போது வெளிப்படுத்துவது சரியல்ல. திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டும். டி.ஆர்.பி. ராஜா தனது மகன் சூரிய ராஜபாலுவை அழைத்து, அப்படி நடந்துகொள்ளக் கூடாது என அறிவுரை கூற வேண்டும்,” என்று காட்டமாக தெரிவித்தார். இந்தச் சம்பவம், அரசியல் மற்றும் பொது மரியாதை குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.