விநாயகர் சதுர்த்தி நாளில் மக்களின் அனைத்து சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாப்படவுள்ளது. இதனையொட்டி நாளை கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை விநாயகருக்கு படையலிட்டு மக்கள் வழிபடுவர். அத்துடன் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதும் வழக்கம்.. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் தங்குதடையில்லாத வெற்றி நிச்சயம் என்பதோடு, துன்பங்களுக்குக் காரணமான வினைகள் நீங்கி, அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்க்கை அமையும் என்பது மக்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை ஆகும்.
வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானை போற்றி வணங்கிடும் இந்நாளில் அனைத்து மக்களின் சோதனைகளும், துன்பங்களும், துயரங்களும் அடியோடு நீங்கி நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.