தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை நோக்கி, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய விஜய், நேரடியாகவும் மறைமுகமாகவும் சில அரசியல் தலைவர்களை விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விஜயை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நாம் தமிழர் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக், ஒன் இந்தியா தமிழ் அரசியல் சேனலுக்கு அளித்த பேட்டியில், “விஜயிடம் 20% - 30% வாக்குகள் இருக்கிறது என்பது ஒரு கற்பனை வாதம். சில பத்திரிகையாளர்கள் தங்களது விருப்பப்படி இப்படிச் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி, விஜய் குறித்து நான்கு நாட்கள் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? பணம் பெற்றுக் கொண்டு இதை செய்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.
அவர் தொடர்ந்து,“விஜயைத் தவிர, அஜித் அழைத்தாலும் கூட்டம் வரும்; சிவகார்த்திகேயன் அழைத்தாலும் கூட்டம் வரும். வெறும் கூட்டத்தை வைத்து அரசியலை மதிப்பிட முடியாது. இதற்கு முன்பு டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் போன்றோர் கட்சி தொடங்கியதே உண்டு. ஆனால் அவர்கள் எங்கு போனார்கள்? விஜய் கூட, கட்சி தொடங்கிய பின் பல தேர்தல்களை புறக்கணித்தார். அப்போ அந்த வாக்குகள் என்ன ஆனது?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர்,“மக்களை சினிமா கவர்ச்சியால் திசைதிருப்புவது ஏற்க முடியாது. அதனால்தான் முதலில் விஜயை ஆதரித்த சீமான், இன்று எதிர்க்கிறார். அரசியலின் அடிப்படை பிரச்சினைகளில் குரல் கொடுக்காமல், சின்னச் சின்ன நிகழ்ச்சிகளைச் செய்வது அரசியல் அல்ல. தூய்மை பணியாளர்களை அலுவலகத்தில் வரவைத்து சந்திப்பது அரசியலா?
கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்சினை, கர்நாடகாவில் காவிரி விவகாரம் போன்றவற்றில் குரல் கொடுக்காமல், தனது படங்கள் அங்குப் போகும் என்பதால் முக்கிய பிரச்சினைகளைத் தவிர்த்து வருகின்றார் விஜய்” என்று குற்றம்சாட்டினார்.
இடும்பவனம் கார்த்திக் மேலும்,“விஜயின் அரசியல் கூட்டங்களில் கொள்கை இல்லை; வெறும் ‘தளபதி, டிவிகே’ என்ற முழக்கம்தான் உள்ளது. இது அரசியல் அல்ல; சடங்கு அரசியல். அதனால் தான் சீமான் விஜயை எதிர்க்கிறார். இதில் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” என தெரிவித்தார்.