விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி புகழ் பெற்றவர் கேபிஒய் பாலா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமான அவரை விட, சமூக சேவைகளின் மூலம் அதிக அன்பும் மதிப்பும் பெற்றவர். கிடைக்கும் வருமானத்தை முழுமையாக ஏழை எளிய மக்களுக்காக செலவழித்து வருகிறார். மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி, முதியோருக்கு வீடு, கல்வி உதவிகள் என பாலாவின் நற்கருமங்கள் ஏராளம்.
இப்போது பாலா, சின்ன ரோல்களில் நடித்து வந்த நிலையை தாண்டி, ‘காந்தி கண்ணாடி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில், பாலாவுக்கு ஜோடியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், இயக்குனர் ஷெரிப் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
“இந்தப் படத்திற்காக பாலா தனது உடல் எடையை 50 கிலோவில் இருந்து 75 கிலோவாக நான்கு மாதங்களில் அதிகரித்து நடித்தார். ஆனால், கதைக்கு ஹீரோயினை தேர்வு செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. கதையை கேட்ட நடிகைகள் முதலில் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் ஹீரோ பாலா என்றதும், டேட்ஸ் இல்லை, கொஞ்சம் டைம் வேணும் என பல்வேறு காரணங்களை சொல்லி விலகிவிடுவார்கள். சிலர் போன் கூட எடுக்காமல் இருந்தனர். மொத்தத்தில் 50 நடிகைகள் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். இறுதியில் 51வது நடிகையாக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி தான் இப்படத்தின் நாயகி ஆனார்,” என்று அவர் கூறினார்.
மேலும், ஹீரோயின் கிடைக்காததாலேயே படப்பிடிப்பு தாமதமானதாகவும், ஒரே நாளில் 12 நடிகைகளுக்குக் கதையை சொல்லியபோதும், அனைவரும் பாலா ஹீரோ என்று கேட்டதும் மறுத்துவிட்டதாகவும் இயக்குனர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மதராஸி” படத்துக்கு போட்டியாக, “காந்தி கண்ணாடி” படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.