நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்த சு. வெங்கடேசன்...பதிவிட்டது என்ன...?
Seithipunal Tamil August 29, 2025 02:48 PM

மதுரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் 'சு.வெங்கடேசன்' அவர்கள் 'நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வராக்கடன்களாக அறிவிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்'.

இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன.

தமிழ்நாட்டில் இத்தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது, ஏனெனில் இது ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய மாநிலமாகும்; இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. நூற்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.இந்தச் சூழலில், ஒன்றிய நிதியமைச்சரின் உடனடி தலையீட்டை நாடுகிறேன். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் வேண்டுகிறேன்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலமாக எதேனும் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.