உஷார்.. OTP கேட்டா கொடுக்காதீங்க! SMS-ல் வரும் S, G, P, T குறியீடுகள் என்ன சொல்கின்றன?
Seithipunal Tamil August 31, 2025 07:48 PM

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். வங்கி, அரசு அமைப்புகள், இ-காமர்ஸ் தளங்கள் என பெயரைப் பயன்படுத்தி போலியான SMS அனுப்பி, மக்களை ஏமாற்றுவது சைபர் குற்றவாளிகளின் புதிய யுக்தியாக மாறியுள்ளது. இப்படி வந்த செய்திகளில் உள்ள லிங்குகளை கிளிக் செய்தாலோ, OTP போன்ற தகவல்களை பகிர்ந்தாலோ, நம்முடைய வங்கி கணக்கு விவரங்கள், தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்படலாம்.

இதைத் தடுக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல் உண்மையான வங்கிகள், அரசு அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அனுப்பும் SMS-களில், அனுப்புநரின் பெயர் (Sender ID) ஒரு சிறப்பு குறியீடுடன் வரும்.

அந்தக் குறியீடுகள் என்ன?

ஒவ்வொரு SMS தலைப்பின் (header) முடிவிலும் வரும் S, G, P, T குறியீடுகளுக்கு தனி அர்த்தமுண்டு:

S (Service):
சேவை தொடர்பான செய்திகள்.
உதாரணம்: வங்கியில் நடந்த பரிவர்த்தனை, OTP, அல்லது ஆன்லைன் ஆர்டர் உறுதிப்படுத்தல்.

G (Government):
அரசு அமைப்புகள் அனுப்பும் அதிகாரப்பூர்வ தகவல்கள்.
உதாரணம்: பொதுச் சேவை அறிவிப்புகள், அரசுத் திட்ட தகவல்கள், எச்சரிக்கைகள்.

P (Promotional):
விளம்பர / மார்க்கெட்டிங் செய்திகள்.
உதாரணம்: சலுகை அறிவிப்புகள், புதிய ஆபர் செய்தி.

T (Transactional):
பரிவர்த்தனை தொடர்பான முக்கிய தகவல்கள்.
உதாரணம்: அவசர OTP, வங்கி பரிவர்த்தனை எச்சரிக்கை.

எச்சரிக்கை!

10 இலக்க சாதாரண எண்ணிலிருந்து வரும் SMS-கள் பெரும்பாலும் போலியானவை. உண்மையான வங்கிகளும், அரசு அமைப்புகளும் ஒருபோதும் தனிப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து SMS அனுப்பமாட்டார்கள். OTP கேட்டால் ஒருபோதும் பகிர வேண்டாம்.

SMS-ல் வரும் இந்த S, G, P, T குறியீடுகளை கவனிப்பதன் மூலம், உண்மையான செய்தி எது, மோசடி செய்தி எது என்பதை எளிதில் அறியலாம். சைபர் மோசடிகளில் சிக்காமல் தப்பிக்க, இது மிகவும் முக்கியமான பாதுகாப்பு வழிகாட்டியாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.