பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.
அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 2,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் வெள்ள பாதிப்பை எடுத்துரைத்த பஞ்சாப் மாகாணத்தின் மூத்த அமைச்சர் மரியம் ஔரங்கசீப், "பஞ்சாப் வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளம் இது. இரண்டு மில்லியன் மக்களை இது பாதித்துள்ளது.
சட்லெஜ், செனாப் ராவி ஆகிய மூன்று ஆறுகள் ஒரே நேரத்தில் இவ்வளவு நீருடன் பெருக்கெடுத்து செல்வது இதுவே முதல் முறை" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில், "இந்த வெள்ள நீரை யாராவது சேமித்து வைக்க வேண்டும்.
வெள்ள பாதிப்புக்கு எதிராகப் போராடுபவர்கள் வெள்ள நீரை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கேயே கொள்கலனில் சேமிக்க வேண்டும். அந்த நீரை ஆசீர்வாதமாக நாம் பார்க்க வேண்டும்.
வெள்ள பாதிப்புகளைத் தடுக்க பெரிய அணைகள் கட்டப்பட வேண்டும். அந்தப் பணிகள் முடிவடைய 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்" என இன்று (செப்டம்பர் 2) கூறியிருக்கிறார்.
இவரின் இத்தகைய பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினையைத் தூண்டியிருக்கிறது.
"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!