அமைதியாக இருந்த அதிமுக அரசியலில் மீண்டும் அதிர்வலை கிளப்பியுள்ளார் கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன். கடந்த ஆறு மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி “மனம் திறந்து பேசுவேன்” என்று அறிவித்திருப்பது, அதிமுகவில் புதிய புயலை உருவாக்கியுள்ளது.
செங்கோட்டையனின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது, சமீபத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தான் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றிருந்தபோதும், மேடையில் இருந்த எடப்பாடி பழனிசாமி அவரை நோக்கி முகம் திருப்பிக் கொண்டதாகவும், “நல்லா இருக்கீங்களா” என்ற வார்த்தைக்குக் கூட வாய்திறக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த செங்கோட்டையன் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இதுவே அவரது அதிருப்தியை வெளிப்படையாகச் சொல்ல தூண்டிய முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.செங்கோட்டையன், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மாவட்ட நிர்வாகிகளிடையே வலுவான ஆதரவைப் பெற்றவராகவும் உள்ளார். எனவே, அவர் தனியாக ஒரு அணியை உருவாக்கலாம், அல்லது கட்சியில் இருந்து விலகலாம் என்ற தகவல்கள் பரவுகின்றன.
ஏற்கனவே அவர் மீது நம்பிக்கை வைக்கும் மாவட்ட நிர்வாகிகள் பலர் உள்ளதால், EPS-க்கு உள்ளக சவால் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில், அதிமுக ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது.அவரின் மறைவுக்குப் பிறகு, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் அரசியல் நிகழ்வுகள் அதிரடியை ஏற்படுத்தின.
ஆட்சியில் இருக்க எடப்பாடி பழனிசாமி பலர் மீது நடவடிக்கை எடுத்து, பின்னர் ஓபிஎஸையும் புறக்கணித்தார்.2024 மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு கடுமையான தோல்வி ஏற்பட்டது; அதே நேரத்தில் பாஜக பல இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில் 2026 தேர்தலை முன்னிட்டு EPS, பாஜகவுடன் மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளார். ஆனால், சசிகலா–ஓபிஎஸ்–டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற கோரிக்கை, மூத்தவர்களிடையே வலுத்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, அத்திக்கடவு அவிநாசி திட்ட விழாவில் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெறவில்லை என செங்கோட்டையன் எதிர்ப்புத் தெரிவித்தது நினைவில் உள்ளது. அதற்குப் பிறகு விவகாரம் தணிந்திருந்தாலும், தற்போது EPS-யின் புறக்கணிப்பு அவரை மீண்டும் வெடிக்க வைத்துள்ளது.
செங்கோட்டையன் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிப்படையாக பேசுவேன் என அறிவித்திருப்பது EPS-க்கு மிகப் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.அவர் தனி அணியாக செயல்பட்டால், அதிமுகவில் பெரிய பிளவு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் மீண்டும் இணைந்திருக்கும் நிலையில், மூத்த தலைவர்கள் விரிசல் காட்டுவது, கட்சியின் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்கக்கூடும்.