சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு, சர்வதேச அரசியலில் முக்கிய கலந்துரையாடலுக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து, நெருக்கமான முறையில் உரையாடிய புகைப்படங்கள் வெளியானது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் வரி நடவடிக்கைகள், குறிப்பாக ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரி நடவடிக்கைகள் போன்ற சூழ்நிலைகளின் பின்னணியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குறித்த சந்திப்பு தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். “இந்தியாவையும், ரஷியாவையும், இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் நீடித்த ஒற்றுமையுடன், வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி, அமெரிக்காவின் தற்போதைய பன்னாட்டு நிதி, வர்த்தகக் கொள்கைகளின் எதிர்விளைவுகள், மற்றும் ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளின் புதிதாக உருவாகும் பன்முக கூட்டணிகள் குறித்த கவலையை பிரதிபலிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.