ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய கேத்ரின் சுல்லிவன் என்ற பெண், கடந்த ஜூலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். 63 வயதான அவர், வங்கியின் கஸ்டமர் மெசேஜிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.
ஆச்சர்யம் என்னவென்றால், வாடிக்கையாளர் சேவைக்காக உருவாக்கப்பட்ட ‘பம்பிள்பீ’ என்ற பெயர் கொண்ட AI சாட்பாட்டை(சாட்பாட் என்பது மனிதர்களுக்கு பதிலாக இயந்திரம் பேசுவது என்று சொல்லலாம்). தானே பயிற்சி கொடுத்திருந்த அவர், அதே சாட்பாட்டின் காரணமாகவே தனது வேலைவை இழந்தார். “இத்தனை வருடங்கள் உண்மையுடன் பணியாற்றினேன், ஆனால் இதுவே என்னைச் சேர்ந்த பாராட்டு எனக்கு கிடைத்தது” என அவர் வருத்தம் தெரிவித்தார்.
சுல்லிவன் பல மாதங்களாக சாட்பாட்டிற்கு ஸ்கிரிப்ட் எழுதி, வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கற்றுக்கொடுத்திருந்தார். பம்பிள்பீ முழுமையாக செயல்படத் தொடங்கியபோது, தன்னை வேறு பிரிவில் பணியமர்த்துவார்கள் என அவர் எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், அதற்கு பதிலாக வேலைவாய்ப்பிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், வங்கியினர் இந்த முடிவில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்டனர். சாட்பாட் வாரத்திற்கு 2,000 அழைப்புகளை குறைக்கிறது எனக் கூறிய வங்கி, உண்மையில் பணியாளர்கள் நீக்கப்பட்டபின் வாடிக்கையாளர் புகார்கள் அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து வங்கி, நீக்கப்பட்ட 45 பேரையும் மீண்டும் பணியில் சேர அழைத்தது. ஆனால், பலர் அதனை ஏற்க மறுத்தனர். சுல்லிவனும் அவர்களில் ஒருவராக இருந்தார். “25 ஆண்டுகள் முழுமையான அர்ப்பணிப்புடன் வேலை செய்த பின் ஏற்பட்ட இத்தகைய அனுபவத்திற்கு பின், அவர்கள் தரும் புதிய பதவிகள் எனக்கு பொருத்தமில்லை” என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் “AI மனிதர்களின் வேலைகளை பறித்து விடுகிறது” என்ற விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.