தென்மேற்கு பருவமழை காரணத்தால்,கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக கர்நாடகாவில் இருக்கும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன.
அணையின் பாதுகாப்பு கருதி, இரு அணைகளிலிருந்தும் சேர்த்து வினாடிக்கு 37,403 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.இந்த நீர் கர்நாடக–தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைகிறது. இதனிடையே, முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14,000 கனஅடி நீரே வந்த நிலையில், நேற்று காலை 6 மணி நிலவரப்படி அது 32,000 கனஅடியாக உயர்ந்தது.
அதன் பின்னர் மேலும் அதிகரித்து தற்போது 43,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.இதன் காரணமாக ஒகேனக்கல் சினி பால்ஸ், மெயின் அருவி,ஐந்தருவி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கூடுதலாக, நடைபாதைகளின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்,மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றின் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், நீர்மட்டம் அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை செய்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இதனால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் 8வது நாளாக குளிக்கும் தடையும், பரிசல் சேவைகளுக்கும் தடை அமலில் இருக்கிறது.