இப்படி கூட மரணம் வருமா ? ஹாஸ்பிடல் Rounds-ல் இருந்த போதே சுருண்டு விழுந்த உயிரிழந்த இதய சிகிச்சை மருத்துவர்..!
Top Tamil News August 31, 2025 09:48 PM

மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் இந்தக் காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதிக வேலைப் பளு, மோசமான உணவுகள், உடல் பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மாரடைப்பு அதிகரித்து இருக்கிறது. முன்பும் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்த மாரடைப்பு சம்பவங்கள் இப்போது பரவலாக அதிகரித்து வருகிறது. இதனால் விலைமதிப்பற்ற உயிர்கள் நாம் இழந்து வருகிறோம்.அப்படியொரு மோசமான சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில்  உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில், முன்னணி இதய அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் கிராட்லின் ராய் (39), பணியின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மருத்துவமனை வளாகத்திலேயே இந்தத் துயரமான சம்பவம் நடந்ததால், சக மருத்துவர்கள் உடனடியாக அவரை மீட்டு, தீவிர சிகிச்சைகள் அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

மருத்துவர் கிராட்லின் ராய், தான் பணிபுரியும் மருத்துவமனையில் வழக்கமான சுற்றுப்பணிகளில் (hospital rounds) ஈடுபட்டிருந்தபோது, திடீரெனக் கீழே விழுந்துள்ளார். அவருக்கு உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டதைக் கண்ட சக மருத்துவர்கள், அவருக்கு சிபிஆர் (CPR) எனப்படும் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி, இன்ட்ரா-அயோடிக் பலூன் பம்ப் மற்றும்இசிஎம்ஓ (ECMO) போன்ற மேம்பட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இருப்பினும், அவரது இதயம் முழுமையாகச் செயலிழந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது இதயத்தின் இடது முக்கிய தமனியில் (left main artery) 100% அடைப்பு இருந்ததே மரணத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், குறிப்பாக இளம் மருத்துவர்கள், ஒரு ஷிப்டில் 12 முதல் 18 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.

நோயாளிகளின் உயிர் காக்கும் முடிவுகளை எடுப்பது, அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பது மற்றும் சட்டரீதியான அழுத்தங்கள் ஆகியவை கடுமையான மன அழுத்தத்தை உருவாக்குகின்றன.

நேரம் தவறி உணவருந்துவது, உடற்பயிற்சி செய்யாதது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். மனரீதியான அழுத்தங்கள், மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மருத்துவர் கிராட்லின் ராயின் திடீர் மரணம், அவரது சக ஊழியர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு இளம் மகன் உள்ளனர். இந்தத் துயரமான நிகழ்வு, இளம் மருத்துவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.