திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 20 வயது இளைஞர், அரசு பேருந்துடன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரின் மகன் பரசுராம் (20) தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், மன்னார்குடி அருகேயுள்ள ராமபுரத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், இதனால் காயத்ரி கோபமாக தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பரசுராம் வடகோவனூரில் இருந்து லட்சுமாங்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோரையாறு பாலம் அருகே, எதிரே வந்த அரசுப் பேருந்து, பரசுராம் செல்லும் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
மேலும் விபத்தில் பரசுராம் பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பரசுராம் உயிரிழந்தார். இது தொடர்பாக கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.