Doctor Vikatan: நான் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு அடிக்கடி தொண்டை எரிச்சலும் வறட்டு இருமலும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் சாக்பீஸ் அலர்ஜி என்று கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்குமா? இதற்கு தீர்வு சொல்லுங்கள்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்.
உங்களுடைய தொண்டை எரிச்சல் மற்றும் வறட்டு இருமல் பிரச்னைக்கு, சாக்பீஸ் அலர்ஜி நிச்சயம் ஒரு காரணமாக இருக்கும்.
மூடப்பட்ட அறை அல்லது வகுப்பறை சூழலில் தொடர்ந்து சாக்பீஸ் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் சாக்பீஸ் துகள்கள் கண்டிப்பாக தொண்டை எரிச்சலை ஏற்படுத்தலாம். அதன் விளைவாக மூக்கு சிவந்துபோவது, நீர் வடிதல் போன்றவை இருக்கலாம்.
சாக்பீஸ் துகள்கள் உள்ளே போகும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்படும். அதனால் ஆஸ்துமா, வீஸிங் போன்றவை வரலாம்.
சிலருக்கு இது தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சரியாகிவிடும். அதுவே நீண்டகாலமாக இதுபோன்ற சூழலில் இருப்பவர்களுக்கு, இன்டர்ஸ்ட்ஷியல் லங் டிசீஸ் (Interstitial Lung Disease) என்ற பிரச்னை வரலாம்.
நுரையீரலை பாதிக்கும் இந்தப் பிரச்னையிலும் மூச்சுத் திணறல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவை வரலாம்.
சாக்பீஸ் உபயோகம் தவிர்க்க முடியாது என்ற கட்டத்தில், அந்த வகுப்பறையில் ஜன்னல்கள் இருக்க வேண்டும், அவை திறந்திருக்க வேண்டும்.
வகுப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான சாக்பீஸை பயன்படுத்துவதும் தீர்வாக இருக்கும். வாய்ப்பிருந்தால், சாக்பீஸ் பயன்பாடு இல்லாத போர்டு உபயோகிக்க முடியுமா என்று அதற்கான மாற்றுவழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா என்று பாருங்கள்.
சாக்பீஸ் பயன்பாட்டால் எல்லோருக்கும் பாதிப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மூச்சுத்திணறல் வந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
நுரையீரல் சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் நுரையீரல் செயல்திறனுக்கான பரிசோதனையைச் செய்வார்கள். சிலருக்கு சிடி ஸ்கேன் தேவைப்படலாம். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து சிகிச்சையைப் பரிந்துரைப்பார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.