லக்னோவில் நடைபெற்ற போஜ்புரி திரைப்பட விழாவில், நடிகை அஞ்சலி ராகவ் மேடையில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த நடிகர் பவன்சிங் திடீரென அவரது இடுப்பை தொட்ட சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதும், அது வேகமாக வைரலாகி விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. வீடியோவில் அஞ்சலி ராகவ் சிரித்தபடி சூழ்நிலையை சமாளிக்க முயன்றதாகக் காணப்பட்டாலும், “அவர் இதை ரசித்தாரா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதால், பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகை அஞ்சலி ராகவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:“நான் அதை ரசித்ததாக யாரும் நினைக்கக் கூடாது. என் இடுப்பில் ஏதோ இருக்கிறது என்று கூறியபடி பவன்சிங் தொட்டார். அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் மேடையில் இருந்ததால் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இனி போஜ்புரி திரைப்படங்களில் நான் பணியாற்ற மாட்டேன்” என்றார்.
இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நடிகர் பவன்சிங், தனது நடத்தைக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், “திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்ற உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தற்போது போஜ்புரி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி, பெண்கள் பாதுகாப்பு, மேடை நாகரிகம் உள்ளிட்ட அம்சங்களைப் பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளது.