மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஹெல்மெட் அணியாததால் பெட்ரோல் கொடுக்க மறுத்த பங்க் ஊழியரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில், நேற்று அதிகாலை பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்குக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர்.
அந்த மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால், பங்க் ஊழியரான தேஜ் நாராயண் நர்வாரியா அவர்களுக்கு பெட்ரோல் வழங்க மறுத்துவிட்டார்.
இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பங்க் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் துப்பாக்கியை எடுத்து ஊழியரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இந்தத் தாக்குதலில் அவரின் கையில் குண்டடி பட்டது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்த ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.