அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில், "பொறுப்பைத் தட்டிக் கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் ஏமாற்று மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை அவரே பலவிதங்களிலும் நிரூபித்து வருகிறார்.
அமெரிக்க அரசு தற்போது உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, இவர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சனைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.
365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த போதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கவில்லை.
ஆனால், விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வரிகளை உயர்த்தியும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், தொழில் முனைவோர்களையும், தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில், கையாலாகாத தி.மு.க. அரசு, திறனற்ற வகையில் செயல்பட்டதன் காரணமாக தொழில் துறை ஏற்கெனவே நலிவடைந்து ஸ்தம்பித்து உள்ளது.
இதன் காரணமாக, தென்னிந்தியாவின் மான் செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரிலும், பின்னலாடை நகரம் மற்றும் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும், வியாபாரங்களும் மெதுவாக தமிழகத்தைவிட்டு ஏற்கெனவே 2022 முதல் வெளியேறத் துவங்கி விட்டன.
அ.தி.மு.க. 2021, கொரோனா காலத்தில்கூட சிறப்பாக நடைபெற்று வந்த ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்கள், தற்போதைய விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், கடுமையான வரி உயர்வு மற்றும் தொழில் கொள்கையால் தள்ளாடி வருகிறது.
விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் பெயிலியர் ஆட்சியில், தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போடும் ஸ்டாலின், அமெரிக்காவின் தற்போதைய வரி உயர்வால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்து உள்ளதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
உண்மையில் இந்த விடியா தி.மு.க.வின் 52 மாத கால ஆட்சியின் அலங்கோல செயல்பாடுகளால் கோவை, திருப்பூரில் பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதே உண்மை" என்று தெரிவித்துள்ளார்.