தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம், அங்குள்ள தமிழர்களிடையே பேரார்வத்தையும், முதலீட்டாளர்களிடையே கவனத்தையும் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர், ஜெர்மனியின் டசெல்டோர்ப் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், சமூக தலைவர்கள், குழந்தைகள், குடும்பத்தினர் என பலர் மலர்களும் பதாகைகளும் ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் தமிழ் பண்பாட்டு விழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான அயலகத் தமிழர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் தலைமை தாங்கினார். தமிழர் அடையாளம், பண்பாடு, மரபு ஆகியவற்றை வெளிநாடுகளில் மேம்படுத்த முக்கிய பங்காற்றிய தமிழ்ச் சங்கங்களுக்கு ஸ்டாலின் கவுரவம் அளித்தார்.
இன்று டசெல்டோர்பில் நடைபெறும் உயர்நிலை முதலீட்டாளர் மாநாடு அவரது பயணத்தின் முக்கிய அங்கமாகும். இதில் உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில் துறை தலைவர்களுடன் முதலமைச்சர் நேரடியாக கலந்துரையாடுகிறார். தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை விளக்கி, புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டங்களை அவர் முன்வைக்கிறார்.
இதற்கிடையில், ஜெர்மனிவாழ் தமிழர்களிடம் முதலமைச்சர் உணர்ச்சிப் பூர்வமான அழைப்பை விடுத்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில்,“வெளிநாட்டில் உயர்ந்து நிற்கும் தமிழர் சாதனைகள் என் உள்ளத்தைக் பெருமையடையச் செய்கின்றன. தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது Dravidian Model அரசு உருவாக்கி வரும் தமிழர் பண்பாட்டு சின்னங்களைப் பாருங்கள். உங்களின் சகோதரன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். எனவே, நம்பிக்கையோடும் உரிமையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், மேலும் முதலீட்டாளர்களையும் அழைத்து வாருங்கள்”
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த வெளிநாட்டு பயணம், வருங்காலத்தில் பெரிய அளவில் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.