தமிழக காவல்துறை டிஜிபி நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. சங்கர் ஜிவாலைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் திமுக புறக்கணித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக பொறுப்பு டிஜிபியை நியமித்த தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு பின்பற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், டிஜிபி பதவிக்கான காலம் நிறைவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே புதிய டிஜிபி நியமனம் செய்வது தொடர்பாக தகுதி வாய்ந்த நபர்களின் பெயரை யுபிஎஸ்சி அமைப்புக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பாகும். ஆனால் அந்தத் தீர்ப்பை மீறும் வகையில் அப்படி புது பெயர் எதையும் தமிழக அரசு பரிந்துரை செய்யவில்லை, அதோடு இல்லாமல் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது இதுவும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது. தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.