ஐரோப்பிய யூனியன் தலைவர் பயணித்த விமானத்தில் ஜிபிஎஸ் சிக்னல் ஜாம்: ரஷ்யாவின் ரஷ்யாவின் சதியாக இருக்கும் என சந்தேகம் ..!
Seithipunal Tamil September 02, 2025 01:48 PM

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பயணித்த விமானம் பல்கேரியாவில் பறந்து செல்கையில் ஜிபிஎஸ் சிக்னல் ' ஜாம்' செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் தலைவராக இருக்கும் உர்சுலா வான் டெர்லேயன்  உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஸ்காண்டினேவிய நாடுகள் (நார்வே, ஸ்வீடன், டென்மார்க்) மற்றும் பால்டிக் நாடுகள் (எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா) தங்கள் பிராந்தியங்களில் ஜிபிஎஸ் சேவையை ரஷ்யா முடக்குவதாக குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லையை ஒட்டியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பல்கேரியாவில் விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த போது ஜிபிஎஸ் ஜாம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து அவ்விமானம் அவசரமாக அந்நாட்டின் புளோவ்டிவ் நகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் செய்தித் தொடர்பாளர் பொடேஸ்டா கூறியதாவது: ஜிபிஎஸ் ஜாம் செய்யப்பட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும் என்றும்,  இதில் ரஷ்யாவின் தலையீடு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக பல்கேரியா தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், ரஷ்யா மற்றும் அதன் பிரதிநிதிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களின் சவால்களை நேரடியாக லேயர் கண்டுள்ளார் என்றும், ஐரோப்பிய யூனியன் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.