டிஆர்பிக்காக இவ்வளவு அசிங்கமா விளையாடுவீங்களா?- 'நீயா நானா' மீது நடிகை அம்மு காட்டம்
Top Tamil News September 02, 2025 01:48 PM

தெருநாய்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்ற படவா கோபியை தொடர்ந்து நடிகை அம்மு விளக்கம் அளித்துள்ளார்.


'நீயா நானா' நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில், தெருநாய்கள் ஒரு சமூகப் பிரச்சனையா அல்லது அவற்றை ஆதரிக்க வேண்டுமா என்பது குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற நடிகை அம்மு, நாய்களுக்கு ஆதரவாக பேசினார். அதேபோல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் படவா கோபி, நாய்களுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால், அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சில கருத்துகள், தெருநாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது போல அமைந்தன.சமூக வலைதளங்களில் இந்த விவாதத்தின் வீடியோ பரவியதும்,பலரும் படவா கோபிக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து, தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டார்.



இந்நிலையில் ‘நாய் குழந்தைய கடிக்கிற வரைக்கும் பெத்தவங்க எங்க போனீங்க? நாய் கிட்ட கடிவாங்காம தோழமையோடு இருங்க! நாயை மட்டும் குறை சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்? மனிதர்களுக்கு கடைசி ஆசை கேட்கப்படுகிறது. நாய்களுக்கு அதுகூட இல்லை. ஆக்ரோஷமான நாய்களை பராமரிக்காமல், அனைத்து நாய்களையும் கூண்டில் அடைப்பது சரியானதல்ல’ என நடிகை அம்மு நீயா நானாவில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், இதுகுறித்து நடிகை அம்மு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நீயா நானாவில் நான் கலந்துகொண்டதை வைத்து நிறைய பேர் ட்ரால் செய்றீங்க... Abuse- ஆ நிறைய வார்த்தைகளை பயன்படுத்திறீங்க. அதுக்கெல்லாம் பயந்து நான் இந்த வீடியோவை போடவில்லை. உங்கள் வெறுப்பை சம்பாதிக்க இந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை. அவதூறு வார்த்தைகளுக்கு பயந்து நான் இந்த வீடியோவை வெளியிடவில்லை.

தனியார் சேனல் 8 மணி நேர நிகழ்ச்சி பதிவை எடிட் செய்து 45 நிமிடம் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளனர். எதிர் தரப்பினருக்கு மட்டுமே வாய்ப்பு அதிகம் வழங்கப்பட்டது. எங்கெல்லாம் நாய்களால் பிரச்சனை நடந்ததோ அவர்களையெல்லாம் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்த தனியார் டிவி நிர்வாகம், எதற்காக நாய்கள் வேண்டும் என நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை. எங்களை பேசவே விடவில்லை.டிஆர்பிக்காக ஏன் இவ்வளவு அசிங்கமான விளையாட்டை விளையாண்டு இருக்கீங்க... இதனால் பாதிக்கப்படுவது நாய்கள் தான்.” எனக் குற்றம்சாட்டினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.