பிரமாண்ட ஊர்வலம்.. விநாயகர் கரைப்பு..சென்னையில் கோலாகலம்!
Seithipunal Tamil September 02, 2025 03:48 AM

சென்னையில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் வாகனங்களில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைக்கபட்டது.  

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இதேபோல கோவில்கள் சார்பிலும், இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு குழுவினர் மற்றும் அந்தந்த பகுதி சங்கங்கள் சார்பிலும் பொது இடங்களில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். பின்னர் அந்த சிலைகள் முதல் நாளில் இருந்தே நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று  சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளும் இன்று கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் வாகனங்களில் ஏற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். அந்தந்த பகுதிகளில் காவல்துறை அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின்னர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 முக்கியமான பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பெரிய சிலைகள் கிரேன்கள் மூலம் கடற்பகுதிக்கு தூக்கி செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.

விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகள் மற்றும் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மோட்டார் படகுகள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிலைகளை கரைக்கும் கடற்கரை பகுதிகளில் ஏராளமான சிலைகள் அணிவகுத்து உள்ளன. எனவே, அனைத்து சிலைகளையும் கரைத்து முடிக்க இரவு 10 மணிக்கு மேல் ஆகும் என தெரிகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.