50, 60களில் பிறந்த தமிழ் குடிமகன்களின் உற்ற நண்பன் விகடன்! - உணர்வுப்பூர்வ பகிர்வு | #நானும்விகடனும்
Vikatan September 02, 2025 03:48 AM

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அடுத்த வருடம் நூற்றாண்டு விழா கொண்டாட இருக்கும் ஆனந்த விகடன், 50, 60களில் பிறந்த தமிழ் குடிமகன்களின் உற்ற நண்பன், சிறந்த வழிகாட்டி என்று சொல்லலாம்.

காலை செய்த்தித்தாளுடன் விகடன் வரும் போது, விகடனை எடுக்க எங்கள் வீட்டில் போட்டி இருக்கும். பள்ளி செல்பவர்களுக்கு காலையில் விகடன் பார்ப்பது தடை என்றாலும், இந்த வார அட்டை பட ஜோக் படிப்பதற்கு போட்டி. பத்திரிகையின் அட்டையில் வண்ண ஓவியத்துடன் ஜோக் போட்டு பிரசுரித்த முதல் பத்திரிகை விகடனாகத்தான் இருக்கும். பின்னர் சோவின் துக்ளக், அட்டையில் அரசியல் கலந்த ஜோக் போட ஆரம்பித்தது.

வாத்தியார் - சிறுகதை

பள்ளிப் பருவத்தில் விரும்பிப் படிக்கும் மற்றோன்று விகடனில் வரும் சினிமா விமர்சனம். சிவாஜி கணேசன் படமென்றால், குடும்ப உறுப்பினர்கள் படம் பார்த்து, படத்தை விவாதிப்பது போன்ற விமர்சனம். எம்ஜிஆர் படமென்றால், இரண்டு நண்பர்கள் பேசுவது போல. நையாண்டி விமரிசனங்களுக்கும் குறைவில்லை. “பாத காணிக்கை” படத்தில் பலரும் ரசித்த தத்துவப் பாடல் “வீடு வரை உறவு” பாடல். இந்தப் படத்திற்கு விமரிசனமாக இந்தப் பாடலைப் போலவே எழுதியிருந்தார் விமரிசகர்.

பாதி வரை பழசு,

பாதிக்கு மேல் பார்த்து

கடைசி வரை காத்து

இருப்பவர் தான் யாரோ?

பிற்காலத்தில் படங்களின் தரத்திற்கேற்ப, விமரிசனத்தின் முடிவில் மதிப்பெண் அளிப்பது தொடங்கியது.

விகடனின் தலையங்கங்கள் நடுநிலையாக இருக்கும். அன்றைய பாரதப் பிரதமர் பண்டித நேருவின் மறைவின் போது எழுதியிருந்த தலையங்கத்தில், அன்னார் மறைந்த அன்று டெல்லியில் சிறிய அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை, இயற்கையே அவர் மறைவிற்கு வருந்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த வருடக் கட்டுரைப் போட்டியின் தலைப்பு “பண்டித நேரு”. போட்டியில் வெற்றி பெற விகடனின் தலையங்கம் பேருதவியாக இருந்தது.

சிறுவர்களுக்காக வந்த கதைகளில் இன்றும் என் மனதில் நிற்பது “போலிஸ் புலி” மற்றும் “வாத்தியார் வேதபுரி”. சித்திரக் கதைகளில் மறக்க முடியாதது தேவன் அவர்கள் எழுதிய “துப்பறியும் சாம்பு.” இதில் சித்திரங்கள் வரைந்தது கோபுலு அவர்கள். “சாகாவரம் பெற்ற நகைச்சுவைக் காவியம்” என்று இதனை வர்ணித்தது கிழக்கு பதிப்பகம்.

வாஷிங்டனில் திருமணம்

எல்லா வயதினரையும் படிக்க வைத்த ஒரு தொடர் கோபுலு சித்திரத்தில் வெளியான “வாஷிங்டனில் திருமணம்”. இதனை எழுதியவர் யார் என்று அறிவிக்காமல் கடைசியில் ‘சாவி” என்று அறிவித்தார்கள். கல்யாண விருந்தில் ஜாங்கிரியின் வடிவத்தைப் பார்த்து “வெரி காம்ப்ளிகேடட் ஸ்வீட்” என்று அதிசயப்படுவதையும், வடுமாங்காய் கடித்துச் சாப்பிட ஆசைப்பட்டு, கையைக் கடித்துக் கொள்வதையும், மிருதுவான வட்ட வடிவ அப்பளத்தை எப்படி சாப்பிடுவது என்று வியப்பதையும் படிக்க நல்ல சுவை.  பதினோறு வாரங்களாக வந்த இந்தக் கதை எத்தனை முறை படித்தாலும் திகட்டாதது.

இரு வேறு துருவங்களாக இருப்பவர்கள் சந்தித்தால் என்ன பேசிக் கொள்வார்கள் என்ற கற்பனையில் உதித்த “இவர்கள் சந்தித்தால்” மற்றுமொரு சுவையான தொடர். இதனால், பல தலைவர்களைப் பற்றி அறிய முடிந்தது. 

விகடனில் கலர் போட்டோக்கள் பிரமாதமாக இருக்கும். இராணி எலிஸபெத் சென்னை வந்த போது பல அழகிய வண்ணப் படங்களை வெளியிட்டது விகடன். சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் என்றால், அந்த வாரம் அதைப் பற்றிய விவரங்களும் வண்ணப் படங்களையும் காணலாம்.

தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரும் விகடனில் எழுதியுள்ளார்கள். தரமான தொடர் கதைகளின் தாயகம் விகடன் என்று சொல்லலாம். தேவனின் “சிஐடி சந்துரு”, அகிலனின் “பாவை விளக்கு” மற்றும் “சித்திரப்பாவை”, சாவியின் “விசிறி வாழை”, ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” மற்றும் “பாரிஸூக்கு போ”, கலைமணி என்ற புனை பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய “தில்லானா மோகனாம்பாள்”, “இராவ்பகதூர் சிங்காரம்”, மணியன், சேவற்கோடியோன் மற்றும் சுஜாதா நாவல்கள் என்று பல வற்றைக் குறிப்பிடலாம். 

விகடனில் வந்த நிறைய நாவல்கள் திரைப்படமாக வந்து மக்களின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக “பாவை விளக்கு”, “தில்லானா மோகனாம்பாள்” ஆகியவை. விகடனில் அதிகம் கவர்ந்த மற்றொன்று சிறுகதைகள். குறுநாவல்களும் விகடனில் வெளியாகின. மனதில் நிற்கும் ஒன்று ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்”.

பயண இலக்கியத்தை எல்லோரும் விரும்பிப் படிக்கும் தொடராக எழுத முடியுமா? முடியும் என்று நிரூபித்தார் மணியன் “இதயம் பேசுகிறது” வாயிலாக. பரணீதரனின் “ஆலய தரிசனம்” அருமையான ஆன்மிகப் பயணத் தொடர்.

பள்ளிப் பருவத்தில் கட்டுரை எழுதுவதற்கு குறிப்புகள் எடுத்துக் கொள்ள உதவியது விகடன். அமெரிக்காவில், உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்ற போது, திருமண நிகழ்ச்சியைத் தமிழில் எழுதித் தரும்படிக் கேட்டார்கள். அதற்காக “நார்த் கரோலினாவில் திருமணம்” என்று நம்மவர்கள் அங்கு திருமணம் நடத்தும் முறை, சந்திக்கும் சவால்கள் பற்றி எழுதினேன். இதற்கு என்னுடைய மானசீக குரு சாவி அவர்கள். எனக்கு கதை, கட்டுரைகள் எழுதும் ஆர்வத்தை அளித்தது விகடன் என்று சொல்லலாம்.

நாம் மொழியில் நல்ல தேர்ச்சி பெற பள்ளி, கல்லூரியில் படிப்பது மட்டும் போதாது. அந்த மொழியில் வரும் நல்ல இதழ்கள், புத்தகங்கள் படிக்க வேண்டும். பல தலைமுறை மக்களின் தமிழ் ஆர்வத்தையும், தமிழறிவையும் வளர்த்த பெருமை விகடனையே சாரும்.

-கே.என்.சுவாமிநாதன், கனடா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.