ஆறுகள் மாசடைவதை தடுக்க ரூ.04 கோடி செலவில் 'மிதவை தடுப்பான்': மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டம்..!
Seithipunal Tamil September 01, 2025 08:48 PM

நீர் நிலைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக், மரக்கட்டை, தெர்மாகோல் போன்ற பொருட்களால் ஆறுகள் குளம் குட்டை என்பன பெரிதும் மாசடைகின்றது. இந்நிலையில் ஆறுகளில் வீசப்படும் இவ்வாறான பொருட்களால் ஆறு மாசடைவதை தடுக்க 'மிதவை தடுப்பான்' திட்டம் கொண்டு வர மாசு கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழகத்தில் காவிரி, வைகை, பவானி, தாமிர பரணி, பாலாறு, தென்பெண்ணை ஆறு, நொய்யல், அமராவதி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் அண்மைக்காலமாக ஆற்று நீரில் மிதக்கும் கழிவுகள் கலப்பது மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக், மரக்கட்டைகள், தெர்மா கோல் போன்றவை தூக்கி வீசப்படுவதாலும்,  பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்து மிதந்து செல்கின்றது.

இதனால் பல இடங்களில் இந்த கழிவு பொருட்களால் நீர் நிலைகளில் தங்கி மாசடைந்து விடுகிறது. இதனால், பிரதான ஆறுகளில் மாசு ஏற்படுவதால், அதை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.

அத்துடன், விவசாயத்திற்கு செல்லும் ஆற்று நீரும் பல்வேறு தொழிற்சாலை, சாயக்கழிவுகளால் அசுத்தமடைகிறது. ஆனாலும், இதுவரை ஆற்றில் மிதக்கும் கழிவுகளை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், பாலம், தடுப்பணை என எதாவது பகுதியில் அடைப்பு ஏற்பட்டால் அதை அகற்ற முடியாமல் பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர். 

இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதன்படி, ஆறுகளில் டிராஷ் பூம் என்ற இடை மறிப்பான் அமைக்கப்பட்டு, மிதக்கும் கழிவுகளை மேலோட்டாக தடுக்க இந்த பூம் தடுப்பான் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.

அதன் முதல் கட்டமாக இதனை ஒரு ஆற்றில் பைலட் திட்டமாக பயன்படுத்தி பார்த்து அதில் உள்ள நிறை குறைகளை ஆய்வு செய்து முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரியத்தினர் தெரிவிக்கையில், ஆற்றின் மீது நீரோட்டத்தில் மிதக்கும் தடுப்புகள் மீன் வலை போல் அமைக்கப்படும். இந்த தடுப்பில் மிதக்கும் கழிவுகள் சிக்கும். இந்த தடுப்பை தாண்டி அடுத்த பகுதிக்கு மிதக்கும் கழிவுகள் செல்லாது. இந்த கழிவுகளை சேகரித்து விரைவாக அகற்ற முடியும். கழிவுகள் அதிகமாக தேங்கியிருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நீர் தடையின்றி ஆற்றில் பாயும் என்றும், இந்த தடுப்பான் அதிக மழை வெள்ளம், சுழல் காலங்களில் எப்படி செயல்படும் என சோதித்து பார்க்க வேண்டியிருக்கிறது என்றும், இடை தடுப்பான்கள் அமைக்கும் திட்டம் நல்ல வரவேற்பு பெறும் என்றும் கூறியுள்ளனர்.

 இதன் முதல் கட்டமாக 04 கோடி ரூபாய் செலவில் 500 இடத்தில் ஆற்றின் மீது இந்த மிதவை தடுப்பான்கள் அமைக்கப்படவுள்ளது என்றும், மாநில அளவில் அனைத்து பிரதான ஆறுகளிலும் இந்த திட்டம் படிப்படியாக பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.