மதுரை கிழக்குத் தொகுதியின் ஒத்தக்கடை பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சுற்றுப்பயண பரப்புரையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வுக்கு கையெழுத்து வாங்கினார்கள். கடைசியில் அந்த கையெழுத்து பேப்பர்கள் காற்றில் பறந்தன. நீட் ரகசியம் தெரியும் என்றார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும், இன்னும் ரகசியத்தை சொல்லவில்லை. திமுக ஆட்சியில் 25 பேர் இறந்துள்ளனர். இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய எங்களால் முடியவில்லை என்று சொல்கிறார் ஸ்டாலின். இதைத்தான் நாங்களும் சொன்னோம். நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது, ஆனாலும் நீட் விலக்கு தான் எங்களின் கொள்கை. ஆனால் எங்கள் மீது பழிபோட்டது திமுக. உங்களுடன் ஸ்டாலின் என ஒரு சீட்டை எடுத்துக் கொண்டு வீடு வீடாக வருகிறார்கள். 46 பிரச்சனைகள் மக்களுக்கு உள்ளதாக ஸ்டாலின் கண்டுபிடித்துள்ளார். இதுக்கு நோபல் பரிசு கொடுத்துடலாமா? திமுக அரசு மக்களிடம் வாங்கும் மனுக்கள் குப்பைக்கு செல்கின்றன.
திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு? வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டால், நான் தவறான தகவலை சொல்கிறேனாம். 2019ல் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டது அதிமுக. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இங்கு தொடங்கப்பட்ட நிறுவனங்களை விரிவுப்படுத்த ஒப்பந்தம் போட்டுள்ளார் ஸ்டாலின். ஆனால் 3 புதிய ஒப்பந்தங்களை போட்டுவிட்டோம் என்கிறார்கள். இப்படி மக்களை ஏமாற்றி, நாடகமாடி, சொற்ப வேலைக்கு சென்றுள்ளார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் மதுரை கிழக்கு தொகுதிக்கு என்ன திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்தது? அமைச்சர் மூர்த்தி அதுபற்றி பேச முடியுமா? இன்று வெளிநாடு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர் வெளிநாடு சென்று, சைக்கிள் ஓட்டியது தான் மிச்சம். இன்றைக்கு நாங்கள் எங்கு கூட்டம் போட்டாலும், அதை தடுக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எங்கு கூட்டம் போட்டாலும், போராடினாலும், அனுமதி அளித்தோம். ஆனால் இன்று யார் போராடினாலும், யார் கூட்டம் போட்டாலும், கொடிகளை, பதாகைகளை பிடுங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் 582 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் கமிஷன் மூலம் ஊழல் செய்துள்ளார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொரு ஊழலையும் தோண்டி எடுத்து விசாரிப்போம். இன்று எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. இங்கிருக்கும் அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவு துறையில் கொள்ளையோ கொள்ளை அடிப்பதாக மக்கள் சொல்கிறார்கள். டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கொள்ளையடிக்கிறார் ஒருத்தர். இங்க பத்திரப்பதிவில் 10% கமிஷன் பெறுகிறார் அந்த துறை அமைச்சர். மகளிர் உரிமைத் தொகையை ஏதோ இவர்களாக கொடுப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசிய பிறகு, 2 ஆண்டுகளுக்கு பின் கொடுத்தார்கள். அதுவும் கடன் வாங்கித் தருகிறார்கள். இந்த கடன் சுமை, மக்கள் தலையில் தான் விடியும். 1 மாதத்துக்கு முன்பு மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை தருவதாக ஸ்டாலின் சொல்லியுள்ளார். இது உங்கள் கஷ்டத்தை பார்த்து வெளியிட்ட அறிவிப்பு அல்ல. தேர்தலை மனதில் கொண்டு வெளியிட்ட அறிவிப்பு. மக்கள் கஷ்டத்தை புரிந்துக்கொள்ளாத அரசு திமுக அரசு. ஓரணியில் தமிழ்நாடு என்று கூறி வீடு வீடாக கதவு தட்டி, திமுகவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கிறார்களாம். எந்த கட்சியிலாவது வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து கட்சியில் சேர்ப்பார்களா? திமுக பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. 2026ல் நடக்கும் தேர்தலில் திமுக பெரும்பான்மையோடு வெல்லும் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு வருகிறார். அவர்கள் கூட்டணியை நம்புகிறார்கள், நாங்கள் மக்களை நம்புகிறோம். மக்கள் நினைத்தால் ஆட்சிக்கு வரலாம். அதிமுக ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகிறார்கள்” என்றார்.