கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மீண்டும் மிரட்டல் விடுத்த குற்றவாளியை கண்டறிய முடியாமல் போலீஸ் திணறுகிறது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் கடந்த மாதம் 26 மற்றும் 27-ந் தேதிகளில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.அப்போது வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினார்கள். இதில், சந்தேகப்படும்படியாக எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது . காலை கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தபோது மீண்டும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இதை பார்த்து அதிர்ச்சிடைந்த ஊழியர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கும், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்பநாயுடன் அதிகாரிகள் விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அதுமட்டுமல்லாமல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டிடங்களிலும் ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டனர்.
மேலும் சோதனையில், இ-மெயில் மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டது போல வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை என்பதால் இதுவும் புரளி என்பது தெரியவந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இன்ற காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.3 முறையும் மிரட்டல் விடுத்தது ஒரே நபராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். முகவரியை கண்டறிய முடியாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெயில் அனுப்புவதால், குற்றவாளியை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.