மருந்துகளின் செயல் முறையில் நாம் சாப்பிடும் உணவு சில நேரங்களில் தலையிடலாம். இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விளைவை நேர்மறையாக பயன்படுத்தி மருந்துகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த ஆய்வுகள் நடக்கின்றன.
ஐந்து மணி நேரமாக நீடித்த ஆணுறுப்பு விரைப்புத் தன்மை, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னையாக இருந்திருக்கும். அவரை சோதித்த மருத்துவர்கள் முதலில் குழப்பமடைந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வந்த 46 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மருத்துவ பணியாளர்களை திகைக்க வைத்தது.
அவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முன், விரைப்பு தன்மையை அதிகரிக்க (erectile dysfunction) பொதுவாக வயாகரா என்று அழைக்கப்படும் சில்டெனஃபில் என்ற மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் உட்கொண்டார்.
விசாரணையில், அந்த நபர் முன்னதாக அதிகளவு மாதுளை பழச்சாறு குடித்திருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் எதிர்விளைவை தடுக்கும் ஊசியை கொடுத்து, இனி மாதுளை ஜூஸை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.
அந்த நபர் குடித்த மாதுளை பழச்சாறு, வயாகரா மாத்திரையின் செயல்பாட்டை அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் முடிவுக்கு வந்தனர்.
உணவு - மருந்து இடையிலான தொடர்புகள்இந்தச் சம்பவம், நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும் என்பதற்கான ஒர் எடுத்துக்காட்டு.
உணவு மருந்துகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய பல விசித்திரமான, சில நேரங்களில் கவலைக்கிடமான பக்கவிளைவுகளை மருத்துவ இதழ்கள் பதிவு செய்துள்ளன.
இப்போது உணவு, பானங்கள், மூலிகைகள் மனித உடலின் உள்ளே செலுத்தப்படும் மருந்துகளுடன் எவ்வாறு வினைபுரிகின்றன என்பதைக் அறியும் ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக, சாத்துக்குடி பழத்தை ஒத்திருக்கும் பம்பளிமாஸ்(Grapefruit) என்று அழைக்கப்படும் பழம் இது போன்ற விளைவுகளை பல தருணங்களில் ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துடன் இந்த பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒரு சில நபர்களுக்கு எதிர்மறை பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, நஞ்சாகவும் இது மாறியிருக்கிறது. மறுபுறம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், மருந்தின் செயல்பாட்டையும் குறைத்துள்ளன.
மருந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை பல தசாப்தங்களுக்கு மேல் ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை கடந்து வருகின்றன. ஆயினும் சந்தையில் ஆயிரக்கணக்கான மருந்துகளும், அவற்றுடன் சேர்ந்து சேர்ந்து எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கோடிக்கணக்கான உணவு கலவைகளும் உள்ளன.
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு பெரிய அச்சுறுத்தலாக இத்தகைய மருந்து - உணவு கலவைகள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
பரிசோதனைகள் மற்றும் வரம்புகள்நிபுணர்கள் இப்போது இந்த தொடர்புகளை முறையாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் இந்த வினையினால் மருந்துகள் தனித்து செயல்படுவதை விடச் சிறப்பாக செயல்படுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
"பெரும்பாலான மருந்துகள் உணவால் பாதிக்கப்படுவதில்லை," என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருந்தியல் பேராசிரியர் பேட்ரிக் சான். "சில குறிப்பிட்ட மருந்துகள் மட்டுமே உணவால் பாதிக்கப்படுகின்றன, அவற்றை நாம் கவனிக்க வேண்டும்."
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்து நிறுவனம் (EMA) ஆகிய இரண்டும் மருந்துகளில் உணவினால் ஏற்படும் தாக்கத்தை சோதிக்கின்றன. அதிக கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவை எடுத்துக் கொண்ட நபர்களிடமும், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் இருக்கும் நபர்களிடமும் இந்த சோதனைகள் எடுக்கப்பட்டுகின்றன. அதில் வெற்றியடையும் மருந்துகளை மட்டுமே இவை பரிந்துரைக்கின்றன.
ஆனால் அனைத்து விதமான உணவு கலவைகளுடன் மருந்துகளை சோதிப்பது சாத்தியமற்றது. மனித உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறை (மெட்டபாலிஸம்) சிக்கலானது எனக் கூறும் செர்பியாவின் நியூட்ரிஷன் மற்றும் மெட்டபாலிசம் ஆராய்ச்சி மையத்தில் (Nutrition and Metabolism Center of Research Excellence) பணிபுரியும் ஆராய்ச்சியாளர் ஜெலேனா மிலேஷெவிச், "இது ஒரு சிறிய தொழிற்சாலை மாதிரி. அதற்கு பல உள்ளீடுகளும், பல வெளியீடுகளும் உண்டு," என்று விவரிக்கிறார்.
உடலின் நடக்கும் வேதியியல் வினைகளின் பலனாக உணவும், மருந்தும் ஒன்றாக கலந்துவிட்டால், "அதனை பிரித்து காட்டுவது மிகவும் கடினம்," என்று கூறுகிறார் மிலேஷெவிச். வைட்டமின் டி மருந்துகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
உணவு நாம் எடுக்கும் மருந்துகளை இரண்டு விதமாக பாதிக்க முடியும்: அது மருந்தின் மூலப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது நமது உடல் மருந்துக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதை மாற்றக்கூடும்.
பிரபலமான உதாரணங்கள்1980களிலிருந்தே சில உணவு–மருந்து கலவைகள் குறித்து தெரியவந்துள்ளது.
அதில் மிகவும் அறியப்பட்ட எடுத்துக்காட்டு பம்பளிமாஸ் மற்றும் அதன் பழச்சாறு. இது கொழுப்பை குறைக்க பயன்படும் statin மருந்து, உயர் ரத்த அழுத்த மருந்தான nifedipine, felodipine ஆகியவற்றுடன் அதிகளவில் வினைபுரிகின்றன..
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் பொருத்தப்பட்ட புதிய உறுப்புகளை நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்க மறுக்கும் போது வழங்கப்படும் cyclosporine போன்ற மருந்தும் பம்பளிமாஸ் உடன் வினையாற்றுகிறது.
சில மலேரியா எதிர்ப்பு மருந்துகள் (artemether, praziquantel) மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (saquinavir) உட்கொள்ளும் போதும் இந்த பழத்தினால் ரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்படுகிறது.
வயாகரா என்று பரவலாக அழைக்கப்படும் சில்டெனஃபில் மருந்துடன் சேரும் போது இந்த பழச்சாறு உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கிறது.
குருதிநெல்லி பழத்தினால் ஏற்படும் விளைவுகள்அதேபோல் கிரான்பெரி என்று அழைக்கப்படும் குருதிநெல்லி பழச்சாறு, ரத்த உறைதலை சீராக்கும் warfarin உடன் சேரும் போது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
தினமும் கிரான்பெரி ஜூஸ் குடித்தவர்கள் அல்லது கிரான்பெரி சாஸ் உடன் உணவை எடுத்துக் கொண்ட நபருக்கு warfarin மருந்து எடுத்துக் கொண்ட பிறகு ரத்த உறைதலைத் தடுக்கும் அதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் மருத்துவ சோதனைகள், மதிப்பீடுகள் இந்த ஜூஸை எவ்வளவு குடித்தால் இத்தகை நேர்மறை விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் முழுமையாக ஆய்வு ஏதுமில்லை. இதுகுறித்து அதிகமாக பகிரப்படும் ஓர் ஆய்வறிக்கையும், கிரான்பெரி ஜூஸ் தயாரிப்பாளரால் நிதியளிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
warfarin மருந்து உட்கொள்ளும் நூற்றுக்கணக்கானவர்களை வைத்து கிரான்பெரி ஜூஸ் தொடர்பான இத்தகைய ஆய்வுகள் முறையாக செய்யப்பட வேண்டும், என்கிறார் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக மருந்தியல் துறை இயக்குநரான ஆன்னே ஹால்ப்ரூக்.
2011-இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், warfarin மருந்து வழிகாட்டுதல்களில் இருந்து கிரான்பெரி எச்சரிக்கையை நீக்கியது. ஆனால் இங்கிலாந்தின் NHS, நோயாளிகள் warfarin எடுத்துக்கொள்ளும் போது கிரான்பெரி ஜூஸ் குடிக்க வேண்டாம் என்று இன்றும் எச்சரிக்கிறது.
2017-இல், டா கிராசா காம்போஸ் இன்னொரு விசித்திரமான சம்பவத்தை கண்டறிந்தார். மூட்டு வாதநோய்க்காக மருந்து எடுத்திருந்த நோயாளி, கைகளில் வலி மற்றும் ரத்த சோகை பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் ஆர்டிச்சோக் எனப்படும் மூலிகை செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட திரவத்தை குடித்திருந்தார். அது மூட்டுவாத நோய்க்காக பயன்படும் colchicine என்ற மருந்துடன் வினையாற்றி அவரது கல்லீரிலில் நச்சுச் தன்மையை சேர்த்தது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்துடனும் அந்த உணவு வினையாற்றியது.
"இது மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும் என்று நினைத்தோம். ஆனால் அவர் தானாகவே முழுமையாக குணமடைந்தார்," என்கிறார் காம்போஸ்.
ஆர்டிச்சோக் போன்ற மூலிகை பானங்கள் பாரம்பரிய மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் காம்போஸ்.
அதேபோல், மஞ்சள் மற்றும் chlorella algae மூலம் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள், புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொண்டு, கல்லீரலில் கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தியதாகக் காம்போஸ் ஆய்வு செய்துள்ளார்.
ரத்த உறைதலை தடுக்கும் மருந்து மற்றும் நீரிழிவு மருந்துகளின் விளைவுகளை அதிகரிக்க மஞ்சள் பரவலாக பயன்படுகிறது.
St John's Wort என்ற மலர் சாறு, மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு மருந்துகள் சில புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது.
பால், தயிரால் என்ன பாதிப்பு?பால், தயிர், சீஸ் போன்றவை, சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் (ciprofloxacin, norfloxacin) குடலால் உறிஞ்சப்படுவதை மாற்றுகின்றன,
இதை ஆராய்ச்சியாளர்கள் 'cheese effect' என்று அழைக்கிறார்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானிய உணவுகளும் இதேபோல் செயல்படுகின்றன. பால் பொருட்களின் மூலக்கூறுகள், மருந்து மூலக்கூறுகளை குடலில் "அணைத்துக் கொள்வதால்" அவை ரத்தத்தில் நுழையாமல் தடுக்கின்றன என்று பேட்ரிக் சான் கூறுகிறார்.
"மருந்து உங்கள் ரத்தத்தில் கூட சேராது, ஏனெனில் குடலில் பால் பொருட்கள் மருந்துகளுடன் இணைவதால், அவை குடலில் சிக்கிக் கொள்கின்றன," என்கிறார் சான்.
இதற்கான தீர்வு எளிது எனக்கூறும் பேட்ரிக் சான், நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் அல்லது பின் இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.
"பால், சீஸ் என அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால் மருந்துடன் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டாம்," என்று அவர் கூறுகிறார்.
சிகிச்சைக்கு எப்படி உதவுகின்றன?இந்த தொடர்புகள் சற்று பயமுறுத்துவதாகத் தோன்றினாலும், எல்லாமே எதிர்மறையாக இல்லை.
சில ஆராய்ச்சியாளர்கள், உணவு–மருந்து தொடர்புகளை பயன்படுத்தி சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். உதாரணமாக, சில புற்றுநோய் மருத்துவர்கள், உணவு குறிப்பிட்ட மருந்துகளுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையை வலுப்படுத்துகின்றனவா என்று ஆராய்கிறார்கள்.
"மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறைச்சி மற்றும் சமைக்காத காய்கறிகளை சாப்பிட்டு வந்தனர். அது உணவுக்குப் பின் குளுக்கோஸ் விரைவாக அதிகரிக்க வைக்காது," என்கிறார் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் உயிரியல் விஞ்ஞானி லூயிஸ் கான்ட்லி.
"அப்போது மரணத்திற்கு காரணமாக புற்றுநோய் அரிதான ஒன்றாகவே இருந்திருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் புற்றுநோய் அதிகரித்திருப்பது, விரைவாகக் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உணவின் அதிகரிப்புடன் தொடர்புடையது," என அவர் கூறுகிறார்.
2018-இல் எலிகளுக்கு கீட்டோஜெனிக் டயட் (குறைந்த கார்போ, அதிக இறைச்சி மற்றும் காய்கறி) கொடுத்து நடத்திய கான்ட்லியின் பரிசோதனைகள், புற்றுநோய் மருந்துகள் டயட் எடுத்த எலிகளில் அதிக விளைவுடன் செயல்பட்டதை காட்டின.
இதன் அடிப்படையில், அவர் தொடங்கிய Faeth Therapeutics நிறுவனம், மனிதர்களிடையே சோதனை செய்கிறது. இதனை அவர் "மரபணுவை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் அறிவியலை மறுபரிசீலனை செய்வது" என்று அழைக்கிறார்.
நியூயார்க் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையமும், கருப்பை புற்றுநோய் கொண்ட பெண்களிடம் இதேபோல் சோதனைகள் நடத்துகிறது.
ஆனால் உணவு–மருந்து இடையேயான தொடர்புகளின் எண்ணிக்கை மில்லியன்கணக்கில் உள்ள நிலையில் இதை ஆய்வு செய்வது சவாலானது.
அதனால், மிலேஷெவிச் கணினி உயிரியலாளர்களுடன் சேர்ந்து, அறிவியல் இதழ்களில் கிடைக்கும் உணவு–மருந்து தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.
"இது எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது அப்படியில்லை," என்கிறார் ஸ்பெயின் IMDEA Food Institute-இன் கணினி உயிரியலாளர் என்ரிக் காரிலோ டி சான்டா.
சில தரவுத்தளங்கள் மட்டுமே கிடைத்தன, ஆனால் அவை ஒத்துப்போகவில்லை. இறுதியில், கோடிக்கணக்கான உணவு–மருந்து தொடர்புகளை ஒருங்கிணைத்து, மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய புதிய தளத்தை உருவாக்கினர்.
இது இன்னும் சிக்கலானது, முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில், மருத்துவர்கள் மருந்து சிகிச்சையுடன் பொருந்தும் உணவு திட்டத்தை பரிந்துரைக்கக்கூடும். அதுவரை, வயாகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது.
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுத் தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் மருத்துவ ஆலோசனைகளுக்கான மாற்றாக இவற்றை கருதக்கூடாது. இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பயனர் மேற்கொள்ளும் எந்தவொரு சிகிச்சைக்கும் பொறுப்பேற்காது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்புற இணையதளங்களின் உள்ளடக்கங்களுக்கும் பிபிசி பொறுப்பல்ல; அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட எந்தவொரு வணிகப் பொருள் அல்லது சேவையையும் பிபிசி ஆதரிக்கவில்லை. உங்கள் உடல்நலனைப் பற்றிய எவ்விதக் கவலையாயினும், எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு