திமுகவை காப்பி அடிக்கிறதா பாஜக..? நயினார் நாகேந்திரன் மகனுக்கு முக்கிய பதவி..!
Top Tamil News September 06, 2025 02:48 AM

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு, அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு, தேசிய மொழிகள் பிரிவு, விருந்தோம்பல் பிரிவு, ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு என மொத்தம் 25 பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

அதில், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மறுபுறம் பாஜகவில் இருக்கும் சிறுபான்மையினரான அலிஷா அப்துல்லா, வேலூர் இப்ராஹிம் போன்றோரின் பெயர்கள் எதிலும் இடம்பெறவில்லை.

இது தவிர 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதாவது வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவப் பிரிவுக்கு பிரேம்குமார், தொழிற் பிரிவுக்கு பாலகிருஷ்ணன், கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு பெப்சி சிவகுமார் மீனவர் பிரிவுக்கு சீமா, கல்வியாளர் பிரிவுக்கு நந்தகுமார், நெசவாளர் பிரிவுக்கு செல்வராஜ், அண்ணாதுரை, படைவீரர்கள் பிரிவுக்கு கர்னல் ராமன் உள்ளிட்டோர் அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாரிசு அரசியல் குறித்து பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. திமுகவை எதிர்க்க பாஜக கையில் எடுத்திருக்கும் மிகப்பெரிய விமர்சன ஆயுதம் வாரிசு அரசியல்தான். இப்படி இருக்கையில், தமிழக பாஜக தலைவரின் மகனுக்கு கட்சியில் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.


இந்நிலையில் இது குறித்த அலிஷா அப்துல்லா அதிருப்தி தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "நான் பாஜகவில் பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்காக மட்டுமே இணைந்தேன். ஏனென்றால், அவர்களின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. மதம் இல்லை! சாதி இல்லை! வெறும் கடின உழைப்பு மட்டுமே. இந்தியாவின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பதால், இதைக் காண்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

நான் இந்த கட்சிக்கு 3 ஆண்டுகள் இரவு பகலாக மிகவும் கடினமாக உழைத்தேன்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 12 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் திரு. கேசவன் விநாயகம் எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. நான் எனது வேலையைக் காண்பிக்க அவரை அணுகியபோது, அவர் என்னை அவமானப்படுத்திவிட்டு நடந்து சென்றுவிட்டார்! இது முஸ்லிம்களுக்கு இங்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது. எனது அனைத்து கடின உழைப்பும் வீணாகிப் போனது வருத்தமாக உள்ளது!" 28 தலைவர்களில் கிறிஸ்தவர்களோ அல்லது முஸ்லிம்களோ இல்லை" என்று கூறியிருக்கிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.