முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிரூபர்களை சந்தித்து பேசினார். அதற்கு முன்பாக வீட்டில் இருந்து அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் பிரச்சார வாகனத்தில் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்த வாகனத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டுமே இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் இல்லை.
அம்மா அவர்கள் சிறந்த ஆட்சியை தந்தார். இந்திய நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு சிறந்த ஆளுமை மிக்க முதலமைச்சராக பவனி வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. தன்னை விமர்சித்தவர்களை அரவணைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக நான் பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். இயக்கத்திற்கு சோதனை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்னுடைய பணிகளை நான் செய்தேன்.
"முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஈபிஎஸ்-ஐ முதல்வராக முன்மொழிந்தவர் சசிகலாதான். கட்சி உடையக்கூடாது என்பதற்காக நான் பல தியாகங்களை செய்துள்ளேன். கட்சி ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எனது கருத்து" என்றார்.
2017-க்கு பிறகு அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த அதிமுக, கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியவர்கள், எவ்வித கோரிக்கைகளும் இன்றி கட்சியில் இணைய தயாராக இருப்பதாகவும், விரைந்து முடிவுகளை எடுக்கவில்லை என்றால் ஒன்றிணைக்கும் பணிகளை சிலர் செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"மறப்போம், மன்னிப்போம் என்பது தான் நமது கட்சி தலைவர்களின் கருத்து. அந்த வகையில், கட்சியில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அவர்கள் எந்த பதவியும் கேட்கவில்லையே. சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.