தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கப்பல்கள் மூலமாகவும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆனால், அமெரிக்கா தற்போது இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கடல் உணவுகளை அமெரிக்கா பாதிவழியில் தடுத்து நிறுத்தியது. இதனால் தமிழகத்தில் கடல் உணவு ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சுங்க முகவர்கள் கூறியதாவது:-
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் அவர்கள் இந்திய பொருட்களை வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அமெரிக்காவுக்கு மாதம்தோறும் சுமார் 1,000 முதல் 1,500 சரக்கு பெட்டகங்கள் அனுப்பப்பட்டு வந்தன. இந்த சரக்கு பெட்டகங்களில் திருப்பூர், கரூர், பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய ரெடிமேடு ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள், கடல் உணவுகள், முந்திரி பருப்பு மற்றும் அரிசி உள்ளிட்டவை அடங்கும்.
அமெரிக்கா வரிவிதிப்பு காரணமாக, இந்த வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதியாகும் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும். இதன்மூலம் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக்கான மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்படும்.
ஏற்றுமதியாளர்கள், சுங்க முகவர்கள், ஷிப்பிங் நிறுவன ஊழியர்கள், போக்குவரத்து நிறுவன ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இந்த சூழ்நிலையில் இருந்து, ஏற்றுமதியாளர்கள் சுங்க முகவர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.