பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி... இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியா?- நயினார் நாகேந்திரன்
Top Tamil News September 06, 2025 03:48 PM

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் திரு. ம.க. ஸ்டாலின் அவர்களைப் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது. மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் சிறிதும் அக்கறை இருந்தால், பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.