Doctor Vikatan: மார்பகங்களில் உருளும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்யலாமா?
Vikatan September 06, 2025 05:48 PM

Doctor Vikatan: என் தோழி இப்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறாள். திடீரென மார்பகங்களில் கட்டி மாதிரி உருள்வதாகச் சொல்கிறாள்.

அதே சமயம், கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான டெஸ்ட் எடுப்பதே ஆபத்து என பயப்படுகிறாள். கர்ப்ப காலத்தில் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்வது பாதுகாப்பானதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கதிரியக்க சிகிச்சை மருத்துவர் எஸ்.பி. ராஜ்குமார்

கர்ப்பகாலத்திலும் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள் செய்யலாம். ஆனால், தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில்  முக்கியமான  சில அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடிய பாதுகாப்பான புற்றுநோய்ப் பரிசோதனைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

மார்பக மருத்துவ பரிசோதனை (Clinical Breast Exam)

மார்பக மருத்துவ பரிசோதனை, இதில் மருத்துவர், மார்பகத்தில் கட்டிகள் உள்ளனவா என்று பரிசோதனை செய்வார். பெண்களும் தாங்களாகவே சுய மார்புப் பரிசோதனை (Self-Breast Exam) செய்து, கட்டிகள் உள்ளனவா என கண்டுபிடிக்கலாம். இந்தப் பரிசோதனைகள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் பாதுகாப்பானவை.

அல்ட்ரா சவுண்ட் (Ultrasound)

அடுத்தது மார்புப் பகுதிக்கான அல்ட்ரா சவுண்ட் (Ultrasound) சோதனை. இது கட்டிகளை மதிப்பீடு செய்யவதற்கான பரிசோதனை. ஒலியலைகளைப் பயன்படுத்துகிறது என்பதால், இந்தச் சோதனை பாதுகாப்பானது. இதில் கதிர்வீச்சு இல்லை.

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா? மேமோகிராம் (Mammogram)

மூன்றாவதாக மேமோகிராம் (Mammogram) சோதனை. கர்ப்ப காலத்தில் மிகமிக  அவசியமென்றால் மட்டும் மேற்கொள்ளப்படும். இதில் கதிர்வீச்சு இருக்கும். கர்ப்பிணியின் வயிற்றுப் பகுதியில் 'லெட் ஷீல்டு'  (lead shield) எனப்படும் கடினமான  உலோக ஷீல்டை வைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். மிகமிக அவசியம் என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிற இந்தச் சோதனை, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கப்படுகிறது.

கடைசியாக  பயாப்சி (Biopsy) பரிசோதனை. கட்டிகள்  இருந்தால் பயாப்சி சோதனை செய்யப்படும். இதுவும் பாதுகாப்பானதுதான்.

CT scan, PET scanகர்ப்பகாலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய சோதனைகள்:

அதிக கதிர்வீச்சு உள்ளதால்  சிடி ஸ்கேன் (CT scan)   மற்றும் பெட் ஸ்கேன் (PET scan)  ஆகியவை கர்ப்பகாலத்தில் தவிர்க்கப்படுகின்றன. மிக மிக அவசர நிலைமையில் மட்டுமே செய்யப்படும்.

கர்ப்பத்தில் மார்பகங்கள் இயற்கையாகவே மாற்றமடையும் என்பதால், அந்தக் காலத்தில் கட்டிகளைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம்.

சி.டி ஸ்கேன்

எப்படி இருப்பினும், மார்பகங்களில்  கட்டி, வலி, வடிவம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பத்துடன் தொடர்பில்லாத எந்தப் பரிசோதனைக்குச் சென்றாலும், முதலில் மருத்துவரிடம் நீங்கள் கர்ப்பமாக உள்ளதைச் சொல்ல மறக்காதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.