அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சியை சேர்ந்த விஜயகுமார் (40) கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவரது தாய் மலர்கொடி, சொத்து தகராறின் காரணமாக மகன் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்தார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் இருந்த விஜயகுமார், திடீரென ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேசை ஆபாசமாக திட்டி, சட்டையை இழுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணை முடிவில், விஜயகுமாரை ஆண்டிமடம் போலீசார் கைது செய்தனர். மேலும், காவல்துறையின் கட்டுப்பாடு மற்றும் மரியாதையை மீறி நடந்ததாக, அவரை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.