பத்து நாட்களுக்குள் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் கெடு விதித்திருக்கிறார்.
இதுபோன்ற கோரிக்கைகளை எடப்பாடி கே. பழனிச்சாமி ஏற்கனவே பல முறை மறுத்துவிட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவரே கெடு விதித்திருக்கிறார். என்ன செய்யப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்த அ.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், "கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன். இதே மனநிலையில் உள்ளவர்களுடன் சேர்ந்து, பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.
அவரது இந்தக் கருத்தை வரவேற்பதாக அ.தி.மு.கவின் முன்னாள் நிர்வாகிகளான வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் தெரிவித்திருக்கின்றனர். "கழகம் (அதிமுக) ஒன்றுபட வேண்டுமென்ற செங்கோட்டையனின் கருத்துதான் ஒவ்வொரு தொண்டனின் கருத்தும். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்" என வி.கே. சசிகலா விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
"'ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்' என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம்" என ஓ. பன்னீர்செல்வமும் தெரிவித்திருக்கிறார்.
நீண்டகாலமாகவே விலகியிருந்த கே.ஏ. செங்கோட்டையன்கே.ஏ. செங்கோட்டையனைப் பொறுத்தவரை, நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்திவந்திருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெரும் தோல்வியை எதிர்கொண்டது. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்பதோடு, வாக்கு சதவீதமும் வெகுவாகக் குறைந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதிவாக்கில் கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் என அ.தி.மு.கவின் ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினர்.
அந்தச் சந்திப்பின்போது பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என இந்த ஆறு பேரும் வலியுறுத்தியதாகவும் அதனை எடப்பாடி கே. பழனிசாமி ஏற்கவில்லையென்றும் செய்திகள் வெளியாகின.
இதற்குப் பிறகு கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல், கட்சியின் பொதுச்செயலாளர் என்று மட்டுமே செங்கோட்டையன் கூறிவந்தார்.
இதற்குப் பிறகு அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பினரும் விவசாயிகளும் இணைந்து எடப்பாடி கே. பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறவில்லையென அதற்குக் காரணம் கூறினார் செங்கோட்டையன்.
இதற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போது எடப்பாடி கே. பழனிச்சாமியின் அறையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. பிப்ரவரி மாதத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா அ.தி.மு.க. தலைமையகத்தில் நடந்தபோது, அந்த விழாவையும் அவர் புறக்கணித்தார்.
இது குறித்து அந்தத் தருணத்தில் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கேட்டபோது, "ஏன் வரவில்லையென அவரிடமே கேளுங்கள்" என்று பதிலளித்தார்.
இதற்குப் பிறகு "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பேரணியைத் துவங்குவதற்காக கோபிச்செட்டிப்பாளையம் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றபோது, கோபிச்செட்டிப்பாளைய எல்லையில் செங்கோட்டையன் வரவேற்பு அளிக்காததும் கவனிக்கத்தக்கதாக இருந்தது.
இந்த நிலையில்தான், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டுமென கே.ஏ. செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.
செங்கோட்டையனின் பேச்சு எடப்பாடி கே. பழனிசாமிக்கு நெருக்கடியா?பிரிந்துசென்றவர்களைச் சேர்க்க வேண்டுமென கே.ஏ. செங்கோட்டையன் தரப்பு காலக்கெடு விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடமிருந்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் வெளியாகவில்லை.
திண்டுக்கல்லில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "செங்கோட்டையனின் கருத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார். அவரது முடிவுதான் எங்களது கருத்து. நாங்கள் அனைவரும் அவரது கருத்துக்கு கட்டுப்படுகிறோம்" என்று மட்டும் கூறியிருக்கிறார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த வேறு சிலரிடம் இது தொடர்பாக கருத்துக்களைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
செங்கோட்டையனின் இந்த முயற்சி எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு உண்மையில் பெரிய நெருக்கடி அல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"செங்கோட்டையனின் நிலைப்பாடு ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். 10 நாட்கள் காலக்கெடு என்று சொன்னதைத் தவிர புதிதாக ஏதும் இல்லை. பத்து நாட்களுக்குள் எடப்பாடி கே. பழனிச்சாமி எதையும் செய்யவும் மாட்டார்.
அப்படியானால், செங்கோட்டையனால் என்ன செய்ய முடியும்? மற்றவர்களோடு சேர்ந்து குரல் கொடுப்பேன் என்கிறார். அவரோடு பெரிதாக யாரும் செல்ல மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இன்றைய சந்திப்பின்போது, எடப்பாடி கே. பழனிச்சாமி பெயரைச்சொல்லிக்கூட ஒரு புகாரையும் அவர் முன்வைக்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான புகார்களை அவர் முன்வைத்திருந்தால்கூட அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும். அப்படியேதுமில்லாமல், எல்லோரையும் சேர்க்க வேண்டும் என்கிறார். இதனால் எதுவும் நடக்காது. எடப்பாடி கே. பழனிச்சாமியைப் பொறுத்தவரை ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சேர்க்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறார்.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் பிரிந்து சென்றது கூட்டணியை பலவீனமாகக் காட்டுகிறது என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும் செங்கோட்டையனின் கோரிக்கையை அவர் ஏற்க மாட்டார். கட்சி அவரிடம் இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் அவருக்கு சாதகமாக இருக்கின்றன. அம்மாதிரி சூழலில் அவர் ஏன் செங்கோட்டையன் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆகவே இது தொடர்பாக எந்த நடவடிக்கையிலும் அவர் இறங்கமாட்டார்" என்கிறார் ப்ரியன்.
ஆனால், எடப்பாடி கே. பழனிச்சாமி எந்த நடவடிக்கையிலும் இறங்காவிட்டால், நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் பத்திரிகையாளர் டி. ராமகிருஷ்ணன்.
"ஓ. பன்னீர்செல்வம் செப்டம்பர் நான்காம் தேதி நடத்துவதாக இருந்த கூட்டம் ஒன்றைத் தள்ளிவைத்தார். செங்கோட்டையனின் செய்தியாளர் சந்திப்பிற்காகவே அதனைத் தள்ளிவைத்திருக்கிறார் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.
எடப்பாடி கே. பழனிச்சாமி இறங்கிவராவிட்டால், வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரு குழுவாகச் செயல்படலாம். அது தேர்தலின்போது தென் மாவட்டங்களில் நிச்சயம் எதிரொலிக்கும். தேர்தலில் தோல்வியடைந்தால், எடப்பாடிக்கு எதிரான குரல் பெரிதாகும். அந்தத் தருணத்தில் அவரால் அதைப் புறக்கணிக்க முடியாது" என்கிறார் அவர்.
ஆனால், ப்ரியனைப் பொறுத்தவரை செங்கோட்டையனால் தனிப்பட்ட வகையில் ஈரோட்டில் சில தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாமே தவிர, வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்கிறார்.
தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, வெள்ளிக்கிழமையன்று மாலையில் இது குறித்து ஏதாவது பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.