அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இடையே கடந்த சில மாதங்களாக நிலவிய பனிப்போர், தற்போது வெளிப்படையான அரசியல் அதிர்வுகளாக மாறியுள்ளது. செங்கோட்டையன், செப்டம்பர் 1ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், “அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன்” எனக் கூறியதற்கேற்ப, நேற்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, “அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய நிர்வாகிகளை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களில் தொடங்க வேண்டும். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விடுகிறேன்,”
என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து, அ.தி.மு.க. உள்நடப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனிசாமி, துரித ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, “அ.தி.மு.க.வில் இன்று எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி. தினகரன், சசிகலா, செல்லூர் ராஜு, இப்போது புதிதாக உருவான செங்கோட்டையன் அணியா என கேட்டுக்கொள்வார்கள் என்றும் அணிகள் அதிகரித்து வருகின்றன,” என்றும் கேலியாக தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் சில தலைவர்கள், தி.மு.க.வின் கூட்டணி களத்தை விமர்சிப்பது குறித்து பேசிய அவர், “தங்கள் கட்சிக்குள் உள்ள குழப்பத்தை தீர்க்காமல், தி.மு.க. கூட்டணியின் நிலைப்பாடுகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த உரிமையும் இல்லை,” என்று உதயநிதி கடுமையாக விமர்சித்தார். “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, தொகுதி மறுவரையறை ஆகியவை தமிழகத்தின் நலன்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். மாநில நிதி உரிமைகள் பறிபோகும்,” என்றும் தெரிவித்தார்.
மேலும் “2026 சட்டசபைத் தேர்தலை நோக்கி, தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை அடைவதற்காக, அடுத்த 6 மாதங்கள் மிகவும் முக்கியமானவை,” என்று கூறியதுடன், “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தும் போரில், நம்மை நம்பி நிற்கும் மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டும்,”
எனவும் வலியுறுத்தினார்.