2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய போருக்கு ஆதரவான சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அது யுக்ரேனிய டாங்கிகளை ட்ரோன் மூலம் தாக்கி வெடிக்கச் செய்யும் வீடியோதான் அது.
ஆனால் ரஷ்யா, யுக்ரேன் இடையிலான போர் நாம் காண்பதைப் போல இல்லை.
இந்த வீடியோவிற்குப் பிறகு யுக்ரேன் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சேதமடைந்த டாங்கியை, ராணுவ வீரர் ஒருவர் சிரித்தபடி காண்பித்து " எனது மர டாங்கியை உடைத்துவிட்டனர்" எனக் கூறுகிறார்.
அங்கிருந்த டாங்கி ரஷ்யாவை குழப்புவதற்காக யுக்ரேன் படைகள் ஏற்பாடு செய்த பலகையால் ஆன ஏமாற்றுவேலை ஆகும்.
எதிரிகளை ஏமாற்றி வெடிபொருட்கள், அவர்களின் நேரம் மற்றும் முயற்சியை வீணாக்குவதற்காக யுக்ரேன் மற்றும் ரஷ்யா என இருநாடுகளும் ஆயிரக்கணக்கான போலி ராணுவ மாதிரிகளை வடிவமத்துள்ளதைப் போலவே இதுவும் ஒரு உத்தியாகும்.
சிறிய ரேடார்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் வீரர்கள் என கிட்டத்தட்ட அங்கிருக்கும் அனைத்தும் போலியாக இருக்கலாம்.
இந்த போலி மாதிரிகள் பெரும்பாலும் தட்டையான பொதிகளாகவோ, ஊதக்கூடிய பலூன் போன்றவையாகவோ, 2D அல்லது ரேடியோ அலைகளை பிரதிபலிப்பதன் மூலம் ஒரு டாங்கியின் ரேடார் மாயை என உருவாக்கப்பட்டிருக்கலாம்.
ஒருவேளை யுக்ரேனில் ஒரு ஆயுதத்தை செலுத்தினால் அதில் பாதிக்கப்படுவதில் பாதி இந்த போலி மாதிரிகளாகவே இருக்கும்.
பலூன் பீரங்கிகள்யுக்ரேன் ராணுவம் பயன்படுத்துவதும் போலிகளிலேயே பிரிட்டிஷ் தயாரித்த M777 ஹோவிட்சர் பீரங்கிதான் மிகவும் பிரபலமானதாகும்.
மேற்கத்திய நட்பு நாடுகள், 150-க்கும் மேற்பட்ட எளிதில் கையாளக்கூடிய பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது. இது யுக்ரேனிய வீரர்களால் 'மூன்று கோடாரிகள்' என அழைக்கப்படுகிறது.
யுக்ரேனிய ராணுவம் பயன்படுத்தும் பல ஆயுதங்களைப்போலவே, இந்த போலி மாதிரிகளையும் தன்னார்வலர்கள் தயாரித்துக் கொடுத்து உதவிவருகிறார்கள்.
நா சாஸி (Na Chasi) என்ற தன்னார்வ அமைப்பு மட்டும் யுக்ரேனிய ராணுவத்திற்கு சுமார் 160 மாடல் M777-களை வழங்கியுள்ளதாக ரஸ்லன் க்ளிமென்கோ கூறுகிறார். இவற்றை ஒன்றுசேர்க்க பெரிய கருவிகள் எதுவும் தேவைப்படாது. 2 பேர் சேர்ந்து மூன்றே நிமிடங்களில் இதை தயார் செய்துவிட முடியும் என்பதே இவர்களை மிகவும் பிரபலமாக காட்டுவதாக க்ளிமென்கோ தெரிவித்துள்ளார். "எத்தனை பொருட்களை வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை. அவையனைத்தும் நல்ல காரியத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன" என அவர் பிபிசியிடம் கூறினார்.
ரியாக்டிவ்னா போஷ்டா என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பாவ்லோ நரோஷ்னி, பொதுவாக ஒரே சமயத்தில் 10 முதல் 15 M777 பீரங்கிகளை தயாரிப்போம் என தெரிவித்தார்.
ரியாக்டிவ்னா போஷ்டாவின் மாதிரிகள் பொதுவாக பலகையில் செய்யப்படுகின்றன. இவை 500 முதல் 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 முதல் ரூ.52,000 வரை) மதிப்பு கொண்டவை.
ரஷ்யா அடிக்கடி 35,000 டாலர் மதிப்புள்ள லான்செட் காமிகாஸ் (Lancet kamikaze) ட்ரோன்கள் மூலம்தான் குறிவைக்கும். "இப்போது நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்" என நரோஷ்னி கூறுகிறார்.
ட்லோயா என அழைக்கப்படும் அவரின் ஒரு M777 போலி பீரங்கி ஓராண்டுக்கும் மேலாக தரைப்படையில் உழைத்துள்ளது. இது 14 லான்செட் ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் யுக்ரேன் படைகள் இதை டேப் போட்டு ஒட்டியோ அல்லது ஸ்க்ரூக்களை மாற்றியே மீண்டும் செயல்படுத்துவார்கள் என அவர் கூறினார்.
சக்கரங்களின் தடம் மற்றும் போலி கழிவறைகள்இந்த போலி மாதிரிகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் முக்கியம். எதிரிகளை ஏமாற்றி அவர்களை தாக்குதலை தொடரத் தூண்டுவதற்கு உண்மையான ராணுவ நிலைகளைப் போலவே இருக்கவேண்டும். அதனால் வாகனங்களின் சக்கரங்களின் தடம், கழிவறைகள் போன்றவை அச்சுஅசலாக இருக்கவேண்டும். இதனால் எதிரிகள் மட்டுமல்ல அதிகாரிகளும் கூட சில சமயங்களில் ஏமாந்துவிடுவார்கள்.
இதுபோன்ற மாதிரிகளால் அதிகாரி ஒருவர் ஏமாந்ததற்கான உதாரணமும் எங்களிடம் உள்ளது. அவர் "பீரங்கிகளை வரிசைப்படுத்த யார் உத்தரவிட்டது? M777 பீரங்கிகளை எங்கிருந்து வாங்கினீர்கள்?" எனக் கேட்டதாக யுக்ரேனின் 33வது பிரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இவர் இன்னொரு உத்தியையும் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால் உண்மையான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு உண்மையான பீரங்கிகளை உடனடியாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக போலியானதை மாற்றிவிடுவார்களாம்.
"இவர்கள் எதிரிகளை ஏமாற்றி, அவர்களின் விலையுயர்ந்த உபகரணங்களை ஒன்றுமே இல்லாத போலிகளிடம் வீணடையச் செய்வதில் வல்லவர்கள். இதுபோல நமக்கு நிறைய தேவை" என்கிறார்.
ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன.
ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை மலிவான மாதிரிகள் என யுக்ரேனிய ராணுவம் கூறுகிறது.
"இது இப்போது 50-50 என உள்ளது. 50% உண்மையான ட்ரோன்களும், 50% மாதிரிகளுமாக உள்ளன. "எங்கள் வான் பாதுகாப்புகளை முறியடித்து, விலையுயர்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி மலிவான ட்ரோனை சுட்டு வீழ்த்த நம்மை ஏமாற்றுவதே அவர்களின் குறிக்கோள்" என யுக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகிறார். சில நேரங்களில், இது பள்ளி மாணவர்களால் ஒன்றாக இணைக்கப்பட்டதைப்போல தோன்றும் ஒரு பலகை மாதிரியாகவும் இருக்கும்.
இது வானில் இருக்கும்போது, யுக்ரேனிய ரேடார் மூலம் பார்க்கையில் உண்மையான ராணுவ ட்ரோன்களைப் போலவே இருக்கும் என கர்னர் இன்ஹாட் கூறுகிறார்.
ரஸ்பல் என்ற ரஷ்ய நிறுவனம் வான்வழி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை ஏமாற்றும் வகையில் 2D மாதிரிகளை தயாரிக்கிறது. இது எஞ்சின் வெப்பம், ரேடியோ சிக்னல்கள், வாக்கி-டாக்கி, பிரதிபலிப்பான் என எதிரிகளை ஏமாற்ற அனைத்தையும் போலியாக வடிவமைக்கிறது.
உண்மையில் ராணுவ வீரர்களும் போலியாக வடிவமைக்கப்படுகின்றனர். நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற மக்களைக் கொண்ட தன்னார்வலர்கள், ராணுவ சீருடை அணிந்திருக்கும் போலி வீரர்களை உருவாக்குகிறார்கள். யுக்ரேனின் வெப்ப கேமராக்களை ஏமாற்ற, மனித உடலின் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜாக்கெட்டுகளுக்கு அடியில் டம்மிகளின் உடல்களைச் சுற்றி வெப்பமூட்டும் கம்பிகளைச் சுற்றி வைக்கின்றனர்.
ஆனால், போரில் இந்த போலி மாதிரிகளை வைக்கும் யோசனை ஒன்றும் புதிது கிடையாது.
டி-டே (D-Day) சமயத்தில்கூட எதிரிகளை திசைதிருப்புவதற்காக இங்கிலாந்து, ராணுவ படைகள், டாங்கிகள், விமானங்கள் என அனைத்தையும் முழுக்க முழுக்க போலியாக வடிவமைத்திருந்தது.
களத்தின் உண்மையான நிலவரத்தை மறைப்பதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. மேலும் எதிரிகளை ஆச்சர்யப்படுத்த நட்பு நாடுகளை ஆயத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ராணுவ தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் தானியங்கி கருவிகளும் பெரிய கண்டுபிடிப்புகளாக உள்ளன.
ஆனால், என்னதான் புதுப்புது ஆயுதங்களை பயன்படுத்தினாலும், இதுதான் தந்திரமாக உள்ளது. மிகச்சிறிய பொம்மை போன்ற ஒன்று கூட போரில் மிகப்பெரிய பங்காற்ற முடியும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு