ATM: Cancel பட்டனை இரண்டு முறை அழுத்தினால் ஏடிஎம் பின்னிற்கு பாதுகாப்பா? உண்மை என்ன?
TV9 Tamil News September 09, 2025 02:48 AM

சமீப காலமாக நாடு முழுவதும் பண மோசடிகள் அதிகரித்திருக்கின்றன. ஹேக்கர்கள் நூதன முறையைைப பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வங்கி ஏடிஎம்களில் (ATM) பணம் எடுக்கும் முன் கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்தினால் பின் (PIN) பாதுகாப்பாக இருக்கும்  என்ற தகவல் கடந்த 2022, 2023 ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் இந்த தகவல் அதிகம் பகிரப்பட்டது.  ஆனால் பலர் இந்த தகவலை உண்மை என நம்பி வருகின்றனர்.  இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம்

இது குறித்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது. அது அளித்துள்ள விளக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி இது தொடர்பான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. மேலும் வங்கிகளும் இதுபோன்ற நடைமுறையை வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கவில்லை. கேன்சல் பட்டனை அழுத்துவது, பரிவர்த்தனையை நிறுத்துவதற்காக மட்டுமே தவிர அதற்கும் பின் பாதுகாப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கமளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா?.. இந்த தவறை செய்யாதீர்கள்.. வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!

ஏடிஎம்மில் உண்மையில் பின் திருடப்படுவது எப்படி?

பின் எண்கள் திருடப்படுவதற்கு முக்கிய காரணம் ஸ்கிம்மிங் டிவைஸ் (Skimming Devices)  என்ற கார்டு விவரங்களை நகலெடுக்கும் கருவிகளை வைத்து பின் திருடப்படலாம். மறைமுக கேமரா பயன்படுத்தி, வாடிக்கையாளர் பின் உள்ளிடும் போது கண்காணிக்கப்பட்டு நம் பணத்தை திருடும் முறை. நம் பணம் எடுக்கும்போது அருகில் இருப்பவர்கள் நம் பின்னை கவனித்து அதன் மூலம் பணத்தை திருடும் முறை என மூன்ற விதங்களில் பின் திருடப்படும். எனவே இதற்கு கேன்சல் பட்டனை இரண்டு முறை அழுத்துவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

பாதுகாப்பாக ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் வழிமுறைகள்
  • பின் உள்ளிடும்போது கையை மூடி எண்களை டைப் செய்யவும்
  • ஏடிஎம்மில் தேவையில்லாத கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என தெரிந்துகொள்வது அவசியம்.
  • எஸ்எம்எஸ் அலெர்ட் எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பரிவர்த்தனை தகவல்கள் உடனுக்குடன் கிடைக்க வேண்டும்.
  • சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளவும்.

இதையும் படிக்க : கடன் நிராகரிப்பு உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்குமா? உண்மை என்ன?

பின் பாதுகாப்பாக பயன்படுத்த அவற்றை யாருடனும் பகிர வேண்டாம். ஏடிஎம் பின்னை மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றவும். 1234, பிறந்த தேதி போன்ற எளிதில் கண்டுபிடிக்க கூடிய ஏடிஎம் பின்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். கார்டு தொலைந்தாலோ அல்லது ஏடிஎம்மில் சிக்கி கொண்டாலோ உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கவும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.