பழிக்கு பழி சம்பவம்.. இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்.. நெல்லையில் பயங்கரம்!
TV9 Tamil News September 07, 2025 12:48 PM

திருநெல்வேலி, செப்டம்பர் 07 : திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி டவுண் சுந்தரர தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (19). இவரது தந்தை பார்த்திபன் மற்றும் தாய் இறந்துவிட்ட நிலையில், இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். டவுணில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், 2025 செப்டம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் வெங்கடேஷ் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு டீக் கடையில் இருந்துள்ளார்.

அப்போது, அங்கிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல், வெங்கடேஷனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, திடீரென மறைத்து வைத்திருந்த அ ரிவாளால் வெங்கடேஷனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின்பு, அந்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியது.. இந்த சம்பவத்தை பார்த்து அந்த பகுதி கடைக்காரர்களும், அவரது நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.  இதுகுறித்து சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Also Read : குலைநடுங்க வைத்த சம்பவம்.. மனைவியை 17 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்.. பகீர் பின்னணி!

இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, துணை போலீஸ் கமிஷ்னர் பிரசன்னகுமார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2023ஆம் ஆண்டு டவுண் பகுதியில் தனியார் பள்ளி அருகே சக்தி என்பவரிடம் 2 கைகளையும் வெட்டிய சம்வத்தில் வெங்கடேஷ்க்கு தொடர்பு இருந்துள்ளதாகவும், இதனால், அந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் கூறுகின்றனர்.

Also Read : வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பாமக பிரமுகர்.. தஞ்சையில் பதற்றம்

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். இதன் அடிப்படையில், போலீசார் 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய கொலையாளியான இசக்கி ராஜாவை (19) போலீசார் தேடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் நெல்லை ரயில் நிலையம் அருகே, இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.