ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய விசிகவினர்.. அண்ணாமலை கண்டனம்..!
WEBDUNIA TAMIL September 07, 2025 12:48 PM

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, காவல்துறையினர் கண்முன்னே, விசிக கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில், எதிர்க்கருத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகள்தான், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, ஒரு அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்துவதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தான போக்கு. திமுகவின் கூட்டணிக் கட்சி என்றால், அவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட காவல்துறை அனுமதிக்குமா?

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர், மற்றொரு தேசியக் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். டிஜிபி அலுவலக வாயிலில், ஒரு கட்சியின் தலைவர் தாக்குதலுக்குள்ளாகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

விசிக கட்சியினர், இந்த ரவுடித்தனத்தை விட்டுவிட்டு, முதலில் அவர்கள் கட்சிக் கொடிக்கம்பம் வைக்க திமுகவிடம் அனுமதி பெற முயற்சிக்கட்டும்.

அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைத் தாக்கிய சமூகவிரோதிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.