நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை டவுன் சுந்தரர் தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மகன் வெங்கடேஷ் (19). பெற்றோர்கள் இருவரும் காலமானதைத் தொடர்ந்து, அவர் சென்னையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சமீபகாலமாக நெல்லையில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி, வாட்டர் கேன் விநியோகம் உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே உள்ள டீ கடைக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில், அங்கு மறைந்திருந்த கும்பல் ஒன்று அரிவாளுடன் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பார்த்தவுடன் வெங்கடேஷ் மற்றும் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிசெல்ல முயன்றனர். ஆனால், கும்பல் அவர்களை சுற்றிவளைத்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷ், ஓட முயன்றபோது, அவரை தனியாகச் சுற்றிவளைத்த அந்த கும்பல், அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இதற்காக 5 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில், டவுன் வயல் தெருவைச் சேர்ந்த இசக்கிராஜா (19), மற்றும் இரண்டு சிறுவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலையில் அந்த இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் டவுனில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு படித்து வருவதாக தெரியவந்தது.
கைதான சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பரபரப்பான தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன்னர், டவுன் பகுதியில் வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, இசக்கிராஜா தரப்பினரின் வாகனத்துடன் மோதல் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனால், இசக்கிராஜா தரப்பினர் அந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு, வெங்கடேஷின் நடமாட்டங்களை கவனித்துவந்துள்ளனர். அவரது அசைவை பார்த்து பின்தொடர்ந்து, அவர் டீக்கடை சென்ற சமயத்தில், முன் திட்டமிட்டபடி கொலை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் முக்கிய சந்தேக நபரான இசக்கிராஜா, பள்ளி படிப்பை முடித்துவிட்டு தனியார் அகாடமியில் போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.