புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை–திருச்சி சாலையில் அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு நாள் தோறும், நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருவதால் எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்தக் கடை, நேற்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைக்கு வந்தனர். அவர்களை சந்தேகித்து காவலாளி விசாரிக்க, “சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம்” என மிரட்டி, கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
அதன் பிறகு, பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.மேலும், காவலாளி தகவலின்பேரில் கடை ஊழியர்கள் விரைந்து வந்து காவலருக்கு புகாரளித்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், புதுக்கோட்டையிலிருந்து மோப்பநாய் தீரன் கொண்டு வந்து சோதனை நடத்தினர்.
அது கடையிலிருந்து திருச்சி சாலை வரை தடயத்தை பின்தொடர்ந்தாலும், கொள்ளையர்களை அடையாளம் காண முடியவில்லை.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கந்தர்வகோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மர்ம கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.