கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழை பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணாடி பாலத்தின் ஒரு பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிலர் அதை சாகசமாக கருதி, விரிசல் விழுந்த இடத்திற்கு அருகே நின்று செல்ஃபி எடுத்து வருகின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், அந்தப் பகுதியில் அட்டைகளை கொண்டு மூடி வைத்து, சுற்றுலா பயணிகளை எச்சரித்துள்ளது. இதைக் கண்ட மக்கள் அந்த இடத்தை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
கடலில் அலைகள் சீற்றமாக இருக்கும்போது படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதால், பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதை கருத்தில் கொண்டு, ரூ. 37 கோடி செலவில், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அமைக்கப்பட்ட பிறகு, கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
Edited by Mahendran