தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு அக்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "எங்களது கழக தலைவருக்கு மக்களிடையே ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவை பார்த்து பயந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் திமுக அரசு,
கடந்த வாரம் எங்கள் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பிற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்க சென்ற கழக பொது செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்கள் மீது திருச்சியில் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டிக்கதக்கது.
எத்தனை தடைகள் வந்தாலும் அதை அனைத்தையும் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவிக்கையில், வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுக்கு பயந்துகொண்டு தொடர்ந்து பல தடுப்பு முயற்சிகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், காவல் துறை அனுமதி பெற வருகை தந்த எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், எங்கள் தலைவர் தளபதி அவர்களுக்கு மக்கள் அளிக்கும் பேராதரவை கண்டு அஞ்சி நடுங்கி வழக்கு பதிவு செய்திருப்பது உங்கள் தோல்வியின் வெளிப்பாடாக வெளிப்படையாக தெரிகிறது.
ஆளும் முதல்வரோ, அமைச்சர்களோ செல்லும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளுக்கு, திமுக கட்சிக் கூட்டத்தால் ஏற்படும் இடையூறுகளுக்கு, திமுகவினர் பேசும் ஆபாச பேச்சுக்களால் ஏற்படும் சமூக சீர்கேட்டிற்கு என இப்படி எதற்காகவது அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதா?
அதிகாரமும் அதிகாரிகளும் மக்களுக்காக பணியாற்றுவதில் இருந்து தவறி.., ஆட்சியாளர்கள் அழுத்தத்திற்கு பணி செய்யும் நிலைக்கு விரைவில் முடிவுரை எழுதப்படும்" என்று தெரிவித்துள்ளார்.