தேசிய தலைமை எடுக்கும் முடிவை தடுக்க முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு நான் காரணம் என டிடிவி தினகரன் எதன் அடிப்படையில் கூறுகிறார்? தற்போதைய கூட்டணியை உருவாக்கியவர் அமித்ஷா. தேசிய தலைமை எடுக்கும் முடிவை எங்களால் தடுக்க முடியாது. நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருந்து அமமுக விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை. அதிமுக இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். டிடிவி தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை. ஆனால் திடீரென ஏன் என் மீது குற்றம்சாட்டுகிறார் என்று தெரியவில்லை. டிடிவி தினகரன் இப்படி பேசியதில் எனக்கு மன வருத்தம்தான். ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரத்தில் டெல்லி தலைமையிடம் பேசி முடிவு எடுப்போம். செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது
தமிழ்நாட்டில் கிரகணம் பிடித்த ஆட்சி இருக்கிறது. அதனால் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது பாஜகவின் நிலைபாடு. தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. தி.மு.க.வை வீழ்த்த, அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே தனது நோக்கம். தி.மு.க. பண பலம் மிக்க கட்சி. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ரூ.15 கோடி ஒதுக்கியுள்ளது. நிர்மலா சீதாராமன் தலைமையில் பூத் கமிட்டி மாநாடுகள் நடைபெற உள்ளது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும்” என்றார்.