"அடிமைகளாலும், அடக்குமுறைகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது..." காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!!
Tamilspark Tamil September 10, 2025 06:48 AM

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் வருடம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பிறகு அந்தக் கூட்டத்தில் பேசிய அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென முதல்வரின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக கூறினார். இந்த விழாவில் 17 துறைகளைச் சேர்ந்த 4997 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசின் சார்பில் கட்டப்படும் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியாது எனக் கூறினார். பாரதிய ஜனதா கட்சி தனது அடக்குமுறைகளை பயன்படுத்தி ஆட்சி செய்து வருவதாக குற்றம் சாட்டிய அவர் அதிமுக அடிமையாக இருக்கிறது என கூறினார். ஆக்கிரமிப்பிற்கும், அடிமைத்தனத்திற்கும் திமுக என்றுமே சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு கலைஞர் உதவித் தொகை விரைவிலேயே கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!

வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின் மீண்டும் திமுகவின் ஆட்சி அமைந்து தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வரலாறு படைக்கும் எனவும் கூறினார். மத்தியில் அடக்குமுறை அரசு ஆட்சி செய்கிறது என குறிப்பிட்ட அவர் தமிழகத்தில் மக்களுக்கான சமூக நீதி அரசின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுக கனவு பலிக்காது; இனிமே நாங்க தான்..." நெல்லையில் அமித்ஷா சூளுரை.!!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.