ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு.
Webdunia Tamil September 10, 2025 11:48 AM

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் இயங்கி வந்த போலியான இணையதளங்களுக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் பல்வேறு வலைத்தளங்களில் ஐஸ்வர்யா ராயின் பெயரில் பல போலி கணக்குகள் மற்றும் பக்கங்கள் இயங்கி வருவதாக, அவரின் சட்டக்குழு சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போலி இணையதளங்கள், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரையும், புகைப்படங்களையும் தவறாக பயன்படுத்தி, சட்டவிரோத மற்றும் தரக்குறைவான விளம்பரங்களை வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயலால் ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் மற்றும் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சஞ்சீவ் நருலா முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த இணையதளங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், போலி இணையதளத்தை நீக்காவிட்டால் கூகுள் நிறுவனத்தை பிரதிவாதியாக சேர்க்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையதளங்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு, நட்சத்திரங்களின் பெயர்களை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.